Muslim History

சவூதியில் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு புதிய சட்டம்.

Saudi
சவூதியில் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், தண்டப் பணமும்..

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிபவர்களுக்கும், அனுமதியற்ற முறையில் சுயதொழில் புரியும் வெளிநாட்டவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

6 மாத சிறைத்தண்டனையும், 50,000 சவூதி றியால் தண்டப்பணத்தினையும் சவூதி அறிவித்துள்ளது. மேலும் இவர்கள் நாடுகடத்தப் படுவர் என்றும் கடவுச்சீட்டுப் பணியகத்தின் தலைமைப் பணிப்பாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிபவர்களுக்கான தண்டனைகள், படிப்படியாக அதிகரித்துச் செல்லும் விதத்தில் 3 கட்டங்களாகக் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முதல் தடவையாக கண்டுபிடிக்கப்படும் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவோர் 10,000 சவூதி றியால்களை தண்டப் பணமாக செலுத்துதல் வேண்டும். இவர்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படாமல் நாடுகடத்தப்படுவர் என்ற விடயம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இரண்டாவது தடவையாக கைதுசெய்யப்படுவோர், 25,000 சவூதி றியால்களை தண்டப் பணமாக செலுத்தவேண்டியுள்ளதுடன், 1 மாதகால சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியுள்ளது. இவர்கள் சிறைத் தண்டனையின் பின்னர் நாடுகடத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு மூன்றாவது தடவையாக கைதுசெய்யப்படுவோர், 50,000 சவூதி றியால்களை தண்டப் பணமாக செலுத்தவேண்டியுள்ளதுடன், 6 மாதகால சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியுள்ளது. இவர்கள் சிறைத் தண்டனையின் பின்னர் நாடுகடத்தப்படவுள்ளனர்.

சவூதி அரசாங்கம் அண்மையில் “சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவோர் அற்ற தேசம்” என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றது. இதன்போது 6 மாதகால பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. பின்னர் இக்கால எல்லை மீண்டும் 1 மாதகாலம் நீடிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 600,000 சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவோர், மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி நன்மையடைந்தனர்.

சவூதியில் தொழிலுக்காக செல்லவுள்ளோர், இத்தகைய விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட்டால் பல விரயங்களை தவிர்க்க முடியும். வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக கடன் பெற்று தமது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதற்காகவே பலரும் வெளிநாடு செல்கின்றனர். இருந்தும் இவர்கள் ஒரு சிலரால் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப் படுகின்றனர். இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக அனுமதி பெற்ற முகவர்கள் மூலமாக தமது தொழிலினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். முகவர் நிலையங்களுக்கு செலுத்திய பணங்களுக்கான பில்களை கேட்டுப் பெற்றுக்கொள்வதன் மூலமும் உங்களை நீங்கள் காத்துக்கொள்ளலாம்.

To Top