Muslim History

ஆய்வுக் கட்டுரை : Covid – 19 இன் பின்னரான ரமழான் எவ்வாறு இருக்கப்போகின்றது …

Ramadan Corona

 

Covid – 19 இன் பின்னரான ரமழான் எவ்வாறு இருக்கப்போகின்றது … என்ற இவ் ஆய்வுக் கட்டுரையானது எதிர்காலத்திற்கு பதிலளிக்கும் நோக்குடையது என்பதனை கண்டுகொள்ள முடியும். இன்னும் பல ஆண்டுகளின் பின்னர், இன்றைய நிலை எவ்வாறு இருந்தது என்பதை இக் கட்டுரை மூலம் ஓரளவுக்கு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

(2020) இம்முறை Covid – 19 இன் பின்னரான ரமழான் எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வி, உலகளாவிய Lockdown முடக்கத்தைத் தொடர்ந்து தவிர்க்க முடியாததாகிவிட்டது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தை, முழு உலகும் கொரோனா வைரஸுக்கு ஆட்பட்டிருக்கும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

ரமழான் என்பது முஸ்லிம்களுக்கு புனிதமான மாதமாகும், அதில் அவர்கள் பகல் நேரங்களில் நோன்பு நோற்கிறார்கள், பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுகிறார்கள், ஒரு சமூகமாக உணவைப் பகிர்ந்து உண்கின்றார்கள். அதே நேரம் இரவுநேரத்தில் அதிக வணக்க வழிபாடுகளிலும் தம்மை இணைத்துக்கொள்வர்.

உயிர் கொல்லித் தொற்றான COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளும் சமூக இடைவெளி பேணவேண்டியுள்ளமையும், இவ் ஆண்டின் ரமழானில் கடைப்பிடிக்கும் பல நடைமுறைகளைகளையும் கூட்டு வணக்க வழிபாடுகளையும் மட்டுப்படுத்தப்போகின்றது.

“இதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்ததாக எனது நினைவுகளில் இல்லை” என்று மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மொஹமட் பைசல் மூசா தெரிவித்துள்ளார்.

“இரண்டாம் உலகப் போர் காலத்திலும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட நேரங்களிலும் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் ஒன்றுகூடி தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.”

“இருப்பினும், நாங்கள் வெறும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை தற்பொழுது எதிர்கொண்டிருக்கின்றோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரமழான் நோன்பு எந்தவகையில் வித்தியாசமாக இருக்கப்போகின்றது ?

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து (‘ஸஹர்’ நேர) விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிடுகிறார்கள், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதை ‘இப்தார்’ என்று அழைக்கிறார்கள்.

நோன்பு துறத்தல் (உண்ணாவிரதத்தை முடித்தல்) என்பது ஒட்டுமொத்த சமுகம் சார்ந்த நிகழ்வாக இடம்பெறும். மஸ்ஜித்களில் இப்தார் (உண்ணாவிரதத்தை முடித்தல்) நிகழ்வுகள் வசதியற்ற மக்களை கருத்தில் கொண்டு பிரமாண்டமாக நடைபெறும்.

சர்வதேசம் எங்கும் பரவியுள்ள இத் தொற்றுநோயால், உலக நாடுகள், ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்கக் கோரியுள்ளன. மேலும் தனித்தனியாக அல்லது வீட்டில் குடும்பத்துடன் சஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோரிக்கையும் சுகாதாரத் துறையினர் முன்வைத்துள்ளனர். இத்தகைய நிலையினை எதிர்நோக்கியிருக்கும் ரமழான் எவ்வாறு இருக்கப்போகின்றது என்று முஸ்லிம்கள் ஒருவகை அச்ச உணர்வில் இருந்துகொண்டிருக்கின்றனர்.

எகிப்தில் ரமழான் இப்தார் நிகழ்வுகள் அனைத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO), சமூக சமய ஒன்றுகூடல் நிகழ்வுகளை தடைசெய்யக்கோரியுள்ளது.

மலேசியா, புருனை, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ரமழானை முன்னிட்டு அமைக்கப்படும் உணவு, குளிர்பான மற்றும் துணிக்கடைகளுக்கு இவ் ரமழான் மாதத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளன.

“இந்த வருமான ஆதாரத்தை பெரிதும் நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் குடும்பப் பொறுப்பை தனியாக தாங்கிக் கொள்ளும் தாய்மார்களுக்கு இது பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று மலேசியாவைச் சேர்ந்த ‘Sisters in Islam’ அமைப்பின் தலைவர் Rozana Isa தெரிவித்துள்ளார்.

பொதுவாக ரமழான் மாதத்தில் உணவுப் பொருட்களின் நுகர்வு அதிகரித்துக் காணப்படுவது வழமையான நிகழ்வாகும். இவ்வேளையில் Lockdown முடக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக, பொருள் விநியோகம் பெரும்பாலான இடங்களில் முற்றாக தடைப்பட்டுள்ளது. இது முஸ்லிம்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் நபர்களுக்கிடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிக அவசியமாகும். பொதுவாக முஸ்லிம்கள் அவர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பரிமாறிக் கொள்ளும் வகையில் கைகுலுக்கி ஆரத் தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறும் வழமை காணப்படுகின்றது. இவ்வாறு நெருங்கி பழகுவதை தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு வணக்க வழிபாடுகள் ?

கூட்டு வணக்க வழிபாடுகள், சமய போதனை நிகழ்ச்சிகள் தற்போது சர்வதேச மட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மஸ்ஜித்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜோர்டான், சிறப்பு மாலை தாராவிஹ் தொழுகையினை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரான், பள்ளிவாசல் ஒன்றுகூடல்களைத் தவிர்த்துள்ளது. மலேசிய மாநிலமான சிலாங்கூரில், மஸ்ஜித்களில் மத நடவடிக்கைகள் குறைந்தது மே 31 வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

“ஐவேளைத் தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள சமயத் தலைவர்கள் மக்களைக் கோரியுள்ளனர். குடும்பத்தவர்கள் ஒரு ஜமாஅத்தாக (கூட்டாகச் சேர்ந்து) ஒன்று சேர்ந்து வணக்க வாழிபாடுகளில் ஈடுபடுவது கடினமானதொன்றல்ல என்பதோடு அது குடும்பங்கள் மத்தியில் காணப்படும் வழமையுமாகும்.” என்று ‘Sisters in Islam’ அமைப்பின் தலைவர் Rozana Isa தெரிவித்துள்ளார்.

சவுதி மன்னர் சல்மான், மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மஸ்ஜித்களில் பொதுமக்கள் வருகை இல்லாமல் நடைபெறும் தாராவிஹ் தொழுகையை சுருக்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தானில் ரமழான் மாதத்தில் மஸ்ஜித்களில் 2 மீற்றர் இடைவெளியில் தொழுகை நடாத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது. அவ்வாறெனில் தொழுகைக்கு வருவோர் வீடுகளில் இருந்து தொழுகை விரிப்புக்கள், பாய்களைக் கொண்டுவருவதற்கு கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலஸ்தீன் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகம் பொதுமக்களுக்காக மூடப்பபட்டுள்ளது. ஐவேளை அதான் ஒலிக்கச் செய்யப் படுவதுடன் ஊழியர்கள் மாத்திரம் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள பல மஸ்ஜித்கள் அல்குர்ஆன் பாராயணம் மற்றும் பிரார்த்தனைகளை live-stream மூலம் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளன.

video-conferencing app Zoom, Facebook, YouTube ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் முஸ்லிம்கள் சமய உரையாடல்களில் கலந்துகொள்ள முடியும்.

ஏழைகளுக்கு எவ்வாறு உதவ முடியும் ?

ரமழான் மாதத்தில் ஜகாத் மற்றும் ஸதகா கொடுப்பது ஊக்குவிக்கப்படுகின்றது.

மார்ச் 26 முதல் இரவு முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல், தொண்டு நிறுவனங்கள் மஸ்ஜித்களுக்கு ரமழான் காலத்தில் வழங்கிய பங்களிப்புக்களை இம் முறை ஏழைகளுக்கு இப்தார் உணவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.

இம்முறை மதீனாவில் உள்ள மஸ்ஜித்துன் நபவி இப்தார் உணவை வழங்காது என அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, சமய, சுகாதார தரப்பினர் online முறைகளைப் பயன்படுத்தி நன்கொடைகளை அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

“இப்தார் நோன்பு திறப்பின் போது காணப்படும் சன நெரிசலைத் தவிர்க்க, பொதியிடப்பட்ட உணவுகளை விநியோகம் செய்வதை கருத்தில் கொள்ளுங்கள்.” என்று WHO தனது ரமழான் வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.

“இவை மையப்படுத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டு, அவை இப்தார் உணவை சேகரித்தல், பொதியிடல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம் செய்தல் போன்ற படி நிலைகளுக்கூடாக தனிநபர் இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும் WHO அறிவுறுத்தியுள்ளது.

COVID-19 அறிகுறிகளுடன் நோன்பு நோக்க முடியுமா ?

அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், உங்கள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

அல்குர்ஆனின் கூற்றுப்படி, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு, ரமழானுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் தவறவிட்ட நோன்பை ஈடுசெய்ய முடியும். வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கூட நோன்பு வைப்பதை தவிர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

“யார் நோன்பு நோற்க வேண்டும் ? யார் நோன்பு நோற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள், என்பது பற்றி மிகவும் தெளிவாக இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு தொற்றுநோய் வலயங்களுக்கு உட்பட்டவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” என்று Rozana Isa குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நபர் ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் இல்லை என்றால், இருமல், காய்ச்சல் மற்றும் சந்தேகத்துக்குரிய நோய்கள் இல்லையென்றால் அவர்கள் நோன்பு வைத்துக்கொள்ளட்டும் என்ற அறிவுறுத்தல் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காலப்பகுதியில் பெருநாளை எவ்வாறு கொண்டாடலாம் ?

ஈத் அல் பித்ர், ரமழானின் முடிவைக் குறிக்கின்றது. முஸ்லிம் நாடுகளில் உத்தியோகபூர்வ விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது. Lockdown முடக்கம் மற்றும் ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டிய கட்டாய நிலையில் இந்த ஆண்டு விழாக்கள் குறைக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.

Indonesia வின் உலமா சபை, ஏனைய நகரங்களில் வசிப்போர் மற்றும் பணிபுரிவோர் விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஈத் பெருநாள் தொழுகை, பிரார்த்தனைகளை வீட்டிலேயே நிறைவேற்றலாம் என்று சவுதியின் பிரதான இமாம் கூறியுள்ளார்.

“இவ் ஆண்டு ஈத் கொண்டாட்டம் Lockdown தடைகளைச் சூழ்ந்ததாகவே அமையும். இது வித்தியாசமானதாக இருக்கும். இம்முறை ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே தமது வீடுகளுக்குள்ளேயே ஈத் கொண்டாட்டத்தை கொண்டாடப் போகின்றன. இவ்வாறான வகையில் ஈத் கொண்டாட்டத்தைக் கொண்டாடினோம் என்று எதிர்கால சந்ததியினருக்குச் சொல்ல இந்த ஆண்டை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.” என்று மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மொஹமட் பைசல் மூசா தெரிவித்தார்.

இந்த அனுபவத்திலிருந்து முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

விசுவாசிகள் ரமழானை மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கடைப்பிடிப்பதால், இதிலிருந்து பல படிப்பினைகளை கற்றுக் கொள்ளலாம்.

உணவு விரயம், வளங்களை வீணாக்குவது மற்றும் தேவைப்படுபவர்களை எவ்வாறு சிறப்பாக வழிநடத்துவது என்பது பற்றிய படிப்பினைகளை ரமழானும் கொரோனாவும் கற்றுத்தரப்போகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top