Article

மர்ஹூம் A.M.A. அஸீஸ் அவர்களுக்கும் நளீமியா கலாசாலைக்கும் இடையிலான காலத்தால் அழியாத உறவு.

மர்ஹூம் A.M.A. அஸீஸ் அவர்களுக்கும் நளீமியா கலாசாலைக்கும் இடையிலான காலத்தால் அழியாத உறவு.

அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் மரணித்து கடந்த நவம்பர் 24 ம் திகதியுடன்  சரியாக 50 வருடங்கள் நிறைவடைகின்றன. நளீமியா கலாசாலை தனது 50 வருட பொன்விழாவை கொண்டாட காத்திருக்கிறது.  மர்ஹூம் எம்.ஏ.எம். அஸீஸ் அவர்களுக்கும் பேருவளை ஜாமியா நளீமியாவுக்கும் இடையிலான உறவு காலத்தால் அழியாத நிலையான வரலாற்று உறவு என்பதால் இச்சிறிய கட்டுரை அவரை நினைவு கூர்ந்து எழுதப்படுகிறது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றிலும் கல்வி, சமய, சமூக, வரலாற்றிலும் தவிர்க்க முடியாத நாமங்களுள் முன்னோடியாக இருக்கும் பலருள் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாட்டின் தேசிய கலைத் திட்டத்திலும் குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும் கொழும்பு ஸாஹிராவின் வளர்ச்சியிலும் இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வியிலும் கணிசமான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய பேருவளை ஜாமியா நளிமியாவின் ஆரம்ப உருவாக்கம், மற்றும் வடிவமைப்பு, கலைத்திட்டம் போன்றவற்றின் விருத்தியிலும்    ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களது கனங்காத்திரமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 19 ம் நூற்றாண்டு இஸ்லாமிய சிந்தனை மாறுநிலைக்கான அல்லது நிலைமாறலுக்கான paradigm shift நூற்றாண்டாக கொள்ளப்படுகிறது. அயல் நாடான இந்திய துணைக் கண்டத்தில் sir செய்து அஹ்மது கான், ஈரானில் ஜமாலுத்தீன் ஆப்கானி, எகிப்தில் முஹம்மது அப்துஹு, போன்றோர் இத்தகைய சிந்தனைச் செம்மல்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.

இலங்கை திரு நாட்டில் அறிஞர் சித்தி லெப்பையின் முஸ்லிம் நேசன் இத்தகைய சர்வதேச மாறுநிலைகளை, சிந்தனை மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து முஸ்லிம் நேசனில் தகவல்களை வெளியிட்டது. சர்வதேச மாற்றங்கள் குறித்த சிந்தனைகளுடன் சித்தி லெப்பையின் கருத்துக்களாலும் பெருங்கவி தத்துவஞானி அல்லாமா இக்பாலின் சிந்தனைகளாலும் வார்க்கப்பட்ட அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களது கல்விச்சிந்தனைகளும் பணிகளும் காத்திரமானவை. காலத்தால் அழியாதவை.

நவீன கல்விக்கூடாக குருட்டுத்தனம், பயனன்ற பழமை பேணும் பிடிவாதம் போன்றவற்றை அறிவுபூர்வமாக எதிர்கொண்டு சமய மறுமலர்ச்சிக்கு, நவீன கல்விக்கூடாக பாலமமைத்தார் அறிஞர் அஸீஸ். அறிஞர் அஸீஸை வாசிப்பது 20 ம் நூற்றாண்டு இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூக, சமய மறுமலர்ச்சியை வாசிப்பதாகவே அமையும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் கற்று கலாநிதியாக மாற இருந்தார். ஆனால் விதி அவரை இன்னொரு திசையில் கால்பதிக்க விட்டது. இதனால் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றுத்துறையில் ஒரு கலாநிதியை இழந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் யாழ் இந்துக் கல்லூரியின் முதல் முஸ்லிம் மாணவன் என்பதும் இலங்கை சிவில் சேவையில் CCS இல் இணைந்த முதல் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சேர் செய்யித் அஹ்மத் கான் நிறுவிய அலிகாரை ஒத்ததாக கொழும்பில் ஸாஹிரா நிறுவப்பட்டது. இஸ்லாமிய ஆட்சியில் அப்பாஸிய காலம் பொற்காலம் போல, கொழும்பு ஸாஹிராவில் அஸீஸ்அவர்களது தலைமையிலான காலம் ஒப்பற்ற காலமாக இருந்தது.TB ஜாயாவின் மறைவை அடுத்து அஸீஸ் அவர்கள் ஸாஹிராவின் அதிபரானார். சமகாலத்தில் எகிப்தின் அல் அஸ்ஹர் கலசாலையுடனும் நெருக்கமான உறவுகளை வைத்து அத்தகைய உயர்ந்த கல்விப்பணிகளை செய்து வந்தார்.

பேருவளை ஜாமியாவின் உருவாக்கத்தில் நளீம் ஹாஜியாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் ஸாஹிராவின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ. அஸீஸ், தாசிம் நத்வி, ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களது ஸாஹிரா கல்லூரி மாணவனாக இருந்து பின்னாளில்  மரணம் வரை பணிப்பாளராக இருந்த கலாநிதி M.A.M. சுக்ரி போன்றவர்களுக்கு கலாநிதி பதியுதீன் மஹ்மூத் போன்றவர்களது ஆசியும் இருந்தமையானது  அன்றைய முக்கிய அரசியல்  புள்ளிகளான பாக்கிர்மாக்கார் தரப்பினருக்கு ஜாமியா மீதான ஈடுபாட்டை சற்று தூரமாக்கியது என ஸாஹிராவின் முன்னாள் அதிபர் ஏ.எம் நஹியா அவர்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதே நேரம் நளீம் ஹாஜியார் தரப்பினருக்கு JR இன் செல்வாக்கும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு எகிப்து அல் அஸ்ஹர் சர்வ கலாசாலைக்கு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியத்தின் உதவியுடன் நான்கு மௌலவிகளை அனுப்பி இலங்கையின் சமய, அரபு மொழிக் கல்விக்கு புதுப்பாதை வரைந்தவரும் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தான் என்கிறார் ஏ.எம் நஹியா அவர்கள்.

ஸாஹிராவில் அதிபராக இருந்த கால கட்டத்தில் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் நிர்மாணிக்க விரும்பிய முஸ்லிம் கலாசார மையம் தான் (Ceylon Muslim Cultural Centre) பின்னாட்களில் பேருவளை ஜாமியாவாக பரிணமித்தது. சமகாலத்தின் சவால்களுக்கு துணிவுடன் முகங் கொடுக்கும் வகையில் நவீன சிந்தனைகளை உள்வாங்கி மார்க்க கல்வியை பரந்த அளவில் கற்றுத் தேர்ந்து இஸ்லாத்தை அதன் உயிரோட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் அவா.

எகிப்தினால் வசீகரிக்கப்பட்டவர் அஸீஸ்.  நளீமிய்யா தொடங்கிய காலப்பகுதியில் ஜாமிஆவுக்கும் எகிப்துக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்ததை அவதானிக்கலாம். ஆரம்பகாலங்களிலேயே ஜாமிஆ மாணவர்களும் விரிவுரையாளர்களும் தமது மேற்படிப்புக்காக எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நளீமியா ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள் அவர் மரணித்தாலும் அவரது நூல்கள் அனைத்துமே சுமந்து வரப்பட்டு நளீமியா நூலகத்துக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதே போல நூலக துறையில் விற்பன்னராக கடமையாற்றிய அல்ஹாஜ் கமால்தீன் அவர்களுக்கு நளீமியாவின் நூலகத்தை ஒழுங்கமைக்க பொறுப்புப்புக்கொடுத்தவரும் அஸீஸ் ஆவார்.

நவீன சிந்தனை, புதிய கல்விக்கொள்கை, ஆகிய இரண்டும் இணைந்து பயணிக்கும் ஒரு கல்வி சார் மத்திய நிலையம் ஒன்றையே அவர் எதிர்பார்த்தார். ஜாமியா மூலம் அதனை அடைய விரும்பினார். கல்வித்துறை குறித்து பகுத்தறிவு வாதத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார். பலத்த சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் முஸ்லிம் சமுகம் பகுத்தறிவை உன்னத நிலையில் வைத்திருக்க வேண்டும், அதனை தாழ்த்தி மட்டந்தட்டி குருட்டு பக்தியை ஏந்தி பயணிக்க முற்படக் கூடாது என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

19 ம் நூற்றாண்டின் பிற்கூறுகளில் காணப்பட்ட நவீன சிந்தனைகளில் ஈடுபாடும் பரீட்சயமும் தேடலும் வாசிப்பும் கொண்டிருந்த ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பிற்போக்குத்தனமான பழைமை வாதங்களில் மூழ்கி இருந்த இஸ்லாமிய கல்வி மரபுகளை தகர்த்து காலத்துக்கு பொருத்தமான புதிய சிந்தனைகள் மீது தனது கவனத்தை செலுத்தலானர். சிக்கல்கள் நிறைந்த பழமைவாத மத போதனைகளை கடுமையாக காரசாரமாக விமர்சித்த நிலையில் தான் ஜாமியாமீதான கருத்திட்டத்தை முன்னெடுத்தார். மிகச்சிறந்த சீரான நடுநிலையான மதக்கல்வியை வழங்குவதே உயர்ந்த தூரநோக்காக அமைந்தது.

1970 களில் ஜாமியாவை நிர்மாணிக்கும் பணிகளில் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் திட்ட ஆலோசகராக மும்முரமாக பணியாற்றினார். கல்விக்கு உயிர்கொடுக்க வேண்டும், அல்லாஹ் தனக்கு வழங்கிய செல்வத்தை அதற்காக அள்ளி அள்ளி செலவிட வேண்டும் என்ற உந்தல் கொடை வள்ளல் அறிவுத்தந்தை நளீம் ஹாஜியார் அவர்களது உள்ளத்தில் எப்போதும் ஊற்றெடுத்துக்கொண்டே வந்தது. இத்தகைய உயர்ந்த எண்ணத்தை அமுலாக்கும் வகையில் மிகச்சிறந்த இஸ்லாமிய கலாசார நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். அதே நேரம் அது பாரம்பரிய கல்வி நிலையங்களைவிடவும் வேறுபட்டு அமைய வேண்டும், அதில் வழங்கப்படும் போதனைகளும் வித்தியாசமானதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.

இதற்கு மிகவும் பொருத்தமான புத்தி ஜீவிகளின், சமூக உணர்வுள்ள தூர நோக்குடன் சிந்திக்கும் மா மனிதர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் தான் சமகாலத்தில் இக்கருத்தை மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்களிடமும் முன்வைத்தார். நளீம் ஹாஜியாரின் எண்ணத்தை செவிமடுத்ததால் அவரின் உற்சாகமும் தூண்டலும் பெருகின. இந்நிலையில் அறிவுத்தந்தை நளீம் ஹாஜியார் அவர்கள்   ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களை சந்திக்கின்றார்கள். தனது எண்ணத்தை முன்வைக்கிறார்கள். இதனால் மட்டில்லா மகிழ்வுற்ற ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் “எமக்கு ஒரு ஜாமியாஹ்” எனும் தலைப்பில் ஏற்கனவே எழுதிய கட்டுரையை நினைவுபடுத்தி தனது நீண்ட நாள் இலட்சியக் கனவு நனவாக போவதை இட்டு மகிழ்ந்தார். நளீம் ஹாஜியாரும் இதற்காக சமூகத்தின் கல்வி மான்கள், சமூக ஆர்வலர்கள், மார்க்க மேதைகள் என பலரையும் தொடராக சந்தித்து நீண்ட உரையாடல்களை மேற்கொண்டு செயலுக்கு இறங்கினார். தான் வாழும் சீனன் கோட்டையிலும் இந்த கருத்தை உள்வாங்கிய பலரையும் இணைத்துக்கொண்டு பயணித்தார்.

கிட்டிய எதிர்காலத்தில் அமைக்க உள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் தொடர்பாக பூர்வாங்க ஆலோசனைகள் இடம்பெற   வெள்ளவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. அதில்   ஏ.எம்.ஏ. அஸீஸ், நீதிபதி மர்ஹூம் ஏ.எம். அமீன், மௌலவி ஏ. எல். எம். இப்ராஹீம், மௌலவி யூ. எம். தாஸின் நத்வி, மௌலவி ஷாஹுல் ஹமீத் பஹ்ஜி, அல் ஹாஜ் ஏ.சீ. வதூத் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த முக்கிய கூட்டத்தில் கொழும்பு பல்கலைகழகத்தில் அரபு மொழி விரிவுரையாளராக இருந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களால் எழுதப்பட்டு நளீம் ஹாஜியார் அவர்களது உதவியால் வெளியிடப்பட்ட “காலத்தின் அறைகூவலும் நவயுகத்தின் சவாலும் “எனும் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டதாக அல்ஹாஜ் ஹிப்துல்லாஹ் கருத்துரைத்ததாக கலாநிதி எம்ஏ.எம் சுக்ரி நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

பாரம்பரிய முறையில் தான், சீனன் கோட்டையில் அமைத்த “அல் மத்ரஸதுல் மபாகிரிய்யா” வின் அனுபவம் கூட இனி அமைக்கப்போகும் கல்வி நிலையத்தை மிகவும் தரமானதாக அமைக்க வழியமைப்பதாக மர்ஹூம் நளீம் ஹாஜியார் அதன் போது குறிப்பிட்டார்.

அமைக்கப்பட உள்ள கலாநிலையம் தொடர்பாக தொடராக கூட்டங்கள் இடம்பெற்றன. செலவினங்கள் அனைத்தையும் அறிவுதந்தை நளீம் ஹாஜியார் பெருமனதுடன் பொறுப்பேற்றார். கலாநிலையத்தின் வளாக அமைப்பு, கட்டட வடிவமைப்பு, போன்றவற்றில் கலாநிதி அஸீஸ் அவர்கள் பெரிதும் ஈடுபாடும் கரிசனையும் காட்டினார். அதற்கான பொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. புகழ் பெற்ற கட்டிடக் கலை நிபுணர் அல்பிரட் கலுபோவில அவர்களது ஆலோசனைகள் பெறப்பட்டன. நளீமியாவின் பரிபாலன சபையில் கலாநிதி அஸீஸ் மற்றும் நீதிபதி ஏ.எம் அவர்களும் நளீம் ஹாஜியாருடன் இணைந்து செயற்பட்டார்கள்.

அடுத்த பிரச்சினை ஜாமியாவின் பாடத்திட்டம், கலைத்திட்டம் தொடர்பான விவாதம் வந்தது. எமது புதிய கலாநிலையத்துக்கு எந்த முன்மாதிரியும் இல்லாமையால்   பாகிஸ்தான் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டுக்கு விஜயம் செய்து அங்குள்ள இஸ்லாமிய கலாசாலைகளின் பாடத்திட்டத்தை அவற்றின் செயற்பாடுகளை அவதானித்து அங்குள்ள முஸ்லிம் கல்விமான்களின் ஆலோசனைகளை பெறுவதே உசிதமானது என கலாநிதி அஸீஸ் அவர்கள் கருத்து ஒன்றை முன்வைக்க அதுவே அமுலானது. மௌலவி யூ.எம் தாஸின் நத்வி, அல்ஹாஜ் ஹிபதுல்லாஹ், கலாநிதி சுக்ரி போன்ற பலரும் 1972 இல் பாகிஸ்தான் நோக்கி பயணம் செய்தனர். கலாநிதி அஸீஸ் அவர்களது பாரியார் 1972 இல் மரணித்ததையும் இங்கு நாம் நோக்கவேண்டியுள்ளது.

தனது பாரியார் பிரிந்த துயரால் தொய்ந்து போன நிலையில் மிகவும் கவலையுடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்த வேளை நளீமியாவுக்கு வருகை தர தயாராகிய நிலையில் அன்னார் மரணித்தார் என்பது அவருக்கும் நளீமியாவுக்கும் இடையில் எத்தகைய உயர்ந்த உன்னத உறவு காணப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

-✍🏻M.A.BISTHAMY✍🏻-

மேலும் இவைபோன்ற செய்திகள் || ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள எமது Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top