News

முஸ்லிம்களது அரசியல் பாஷை எது?

அரசியல்
முஸ்லிம்களது அரசியல் பாஷை எது?

சூறாவழியில் சிக்கிய இலங்கையின் அரசியல் வள்ளம் பிரதமர் மற்றும் அமைச்சர்களது நியமனத்தின் பின்னர் மிகுந்த சிரமங்களுக்குப் பின்னர் கரையொதுங்கியிருப்பது போன்ற ஓர் உணர்வில் எம்மில் பலர் இருப்பதை அவர்களது பதிவுகள் காட்டுகின்றன.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் சில நாட்களாகக் கொழும்பின் சில இடங்களில் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘கட் அவுட்’ களும் ‘பெனர்’ களும் ஏதோ இந்த நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஏக சக்தி முஸ்லிம்கள் தான் என்று பெரும்பான்மையினரது காதைத் திருகிச் சொல்வது போல் இருக்கிறது. முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் கணிசமான தொகையினரும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள் என்பது முழு நாட்டுக்கும் நன்கு தெரியும்.

ஆனால், எம்மால் தான் சாதிக்க முடிந்தது என்ற தோரணையில் நாம் எம்மைத் தூக்கி நிறுத்துவதற்கும் ஒரு எல்லை இருப்பது அவசியமாகும்.

ஆளும் தரப்பை அளவு மீறிப் புகழ்ந்து ஆட்சிக்கே சொந்தம் கொண்டாடுவதும் அவர்களையும் சங்கடத்துக்கு உள்ளாக்கும். அடுத்த பக்கத்தில் முஸ்லிம் சமூக விரோதிகளைக் கடுப்பேற்ற உதவும். இரண்டுமே நல்லதல்ல.

முஸ்லிம்களில் சிலருக்குக் கிடைத்த அமைச்சுப் பொறுப்புக்களை வைத்து கட்சி ஆதரவாளர்கள் அளவு மீறி தற்புகழ்ச்சியில் ஈடுபடும் போது அது துவேஷிகளது மனதைக் குடைவதனை மறந்து விடலாகாது. இனவாத சிந்தனை கொண்ட பலரும் பெரும்பாலும் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை யாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

இவ்வாறு நாம் கூறுவததற்கு ஒரு பலமான நியாயமுள்ளது.

இந்த அரசியல் சதுரங்கத்தில் தோல்வியைத் தழுவியுள்ளவர்கள் படுமோசமான விரக்தியிலும் ஆவேஷத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க எதனையும் செய்யக்கூடும். இது உலக நியதி.பணம், இனவாதம், கட்சி வெறி, மதவெறி எதனையும் அவர்கள் பிரயோகிக்கக் கூடும்.

ஆனைக்கொரு காலம் வந்திருப்பது போல பூனைக்கும் ஒரு காலம் வந்தால் என்ன நடக்கும் என்பதையும் ஊகித்து நாம் எமது ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்க்க வேண்டும். ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைக்க வேண்டும்.

நாம் மேல் சொன்ன இந்த ஆயுதங்களை பிரயோகிப்பதில் ஆளும் கட்சியும் விதிவிலக்கல்ல. எவர் விடயமாகவும் பூரண நம்பிக்கை வைக்க முடியாத நிலை தான் இருக்கிறது.

முஸ்லிமைப் பொறுத்தவரையில் அரசியலும் அதனுடன் ஒட்டிய அதிகாரமும் அல்லாஹ்விடமிருந்து நிலைபேறான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மனித நலன்களை ஈட்டிக்கொடுப்பதற்குமான வெறும் ஊடகங்களே தவிர அவை அவனது தெய்வங்களல்ல.

மறுமையை விசுவாசிக்காதவர்ளை அதாவது, வாழ்வுக்கு உன்னதமான குறிக்கோளைக் கொண்டில்லாதவர்களைப் பொருத்தவரை அரசியல் என்பது ஒரு தெய்வம், உழைப்புக்கான வழி, புகழை அடையும் பாலம். அவர்கள் வாழ்வதே அதற்காகத் தான்.

ஒரு முஸ்லிம் தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நின்ற வண்ணம் “வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ… “எனது தொழுகையும் எனது பலியிடலும் எனது வாழ்வும் எனது மரணமும் உலகத்தாரின் ரட்சகன் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும்” என்று கூறும் போது உலகிலுள்ள பெரும்பாலானவர்களோ இவை அனைத்தும் பணத்துக்காக, பெண்ணுக்காக, அரசியல் அதிகாரத்துக்காக, வரட்டு கெளரவத்துக்காக என்று தான் கூறுகிறார்கள்.

எனவே, நாம் அரசியலில் ஈடுபடத் தான் வேண்டும். பணம் உழைக்கத்தான் வேண்டும். மனைவி மக்களோடு வாழும் குடும்ப நிறுவனத்தில் சம்பந்தப்படத் தான் வேண்டும். ஆனால், அவற்றை பூஜிக்கும் நிலைக்குப் போய் விடலாகாது. அது ஆபத்தான கட்டம். அப்படி வந்தால் அது ஒரு ஷிர்க் என்பதில் சந்தேகமில்லை. நீருக்கு மேலால் ஓடம் மிதக்க வேண்டுமே தவிர நீர் ஓடத்துக்குள் வர அனுமதிகக் கூடாது.

முஸ்லிமின் இலக்குகள் தேசத்திலுள்ள அனைவரையும் தழுவிய சமாதானம், சகவாழ்வு, சமூக நீதி, பொருளாதார சுபீட்சம், மனித விழுமிய மேம்பாடு, மனப்பாங்கு வளர்ச்சி போன்ற உன்னதமான குறீக்கொள்களாகும். இவற்றை வளர்ப்போர் யாராக இருப்பினும் அவர்களோடு கைகோர்ப்பதற்கே அவன் அல்லாஹ்வால் கலீபாவாக நியமிக்கப்பட்டிருக்கிறான். “நற்காரியங்களுக்காகவும் பயபக்திக்காகவும் பஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள்” என்ற மறை வாசகமே அவனது தாரக மந்திரமாகும்.

எங்கெல்லாம் லஞ்சம், இனவாதம், அராஜகம், ஓரவஞ்சனை, உரிமை மீறல்கள், சுயநலம் போன்ற அசிங்கங்கள் இருக்குமோ அங்கு அவன் தனது பலமான எதிர்ப்பைக் காட்டுவான். “பாவமான காரியங்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு நீங்கள் பரஸ்பரம் ஒத்துழைக்காதீர்கள்.! என அல்லாஹ் கூறியிருக்கிறான்.

நபி ஷுஐப் (அலை) அவர்கள் பொருளாதார அராஜகத்துக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். பண வணங்கிகளது வியாபார மோசடிகளை அவர்கள் துணிச்சலோடு எதிர்கொண்டார்கள்.

லூத்(அலை) அவர்கள் ஆபாசத்தையும் ஓழுக்க வீழ்ச்சியையும் கண்டு மனம் வெதும்பி எதிர்நீச்சல் போட்டார்கள்.

மூஸா(அலை)அவர்கள் பிர்அவுனால் பிழியப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட பனூஇஸ்ராயீல்களை விடுவிக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள்.

இவை தான் நபிமார்கள் காட்டிய புனிதமான அரசியல் பாதை. சமூகம் அல்லல்பட்ட போது மறுமையின் கூலியை நோக்காகக் கொண்டு களமிறங்கினார்கள். மாறாக உழைப்பின் ஊடகமாக அவர்கள் அரசியலை ஆக்கிக்கொள்ளவில்லை.

எனவே, கட்சிக்காக அன்றி ஒரு கொள்கைக்காக ஒரு முஸ்லிம் வாழ வேண்டும். கட்சிக்காகக் கொள்கையா? கொள்கைக்காகக் கட்சியா? என்ற கேள்விக்குத் தீர்க்கமான பதிலைக் காண வேண்டும்.

நான் தொடர்ந்தும் ஒரு கட்சியில் இருப்பதால் அது எக்கேடு கெட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும், எனக்கு தேர்தலுக்கான டிக்கட் கிடைக்க இங்கு தான் அது சாத்தியப்படும் போன்றவற்றை வைத்து தனது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பவர் இஸ்லாம் எதிர்பார்க்கும் அரசியல்வாதியல்ல.

அல்லாஹ்வின் பிரதிநிதியாக உலகுக்கு வந்துள்ள நான் எப்போதும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதே மறுமையில் விமோசனத்தைப் பெற்றுத் தரும் என்பதை அரசியலில் சம்பந்தப்படும் ஒவ்வொருவரும் உணரும் வரை நாம் கனவு காணும் ‘யஹபாளனய’ வராது. கடந்த காலத்தைப் போன்றே எதிர்காலத்திலும் இன்னும் பலரை நம்பி நாம் ஏமாற வேண்டிவரும்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து நமது தேசத்துக்கு விடிவைத் தருவானாக. எம்மை நேரான பாதையில் வழிநடாத்துவானாக!

Ash-Sheikh. S H M Faleel
Vice President – National Shoora Council

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top