Book

நூல் “நளீம் ஹாஜியார் – வாழ்வும் பணியும்.”

நூல் "நளீம் ஹாஜியார் – வாழ்வும் பணியும்."

பொன்விழா காணும் நளீமியாவின் ஸ்தாபகர் அறிவுத்தந்தை அல் ஹாஜ் நளீம் குறித்து
கலாநிதி M. A. M. SHUKRI அவர்கள் சர்வதேச ஆய்வுத்தரம் கொண்டவகையில் எழுதிய ஆளுமை வரலாற்று நூல்

நூல் “நளீம் ஹாஜியார் – வாழ்வும் பணியும்.”

நூலாசிரியர் : கலாநிதி மர்ஹூம் M.A.M. ஷுக்ரி

கலைகளில் பேராழம் கண்ட பெரும்சமுத்திரம் ஒன்றால்
பன்முக ஆளுமை மிக்க இன்னொரு சரித்திரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு ஞானச்சுடர் தன்னை சுமந்துள்ள அகன்ற வானை கொண்டாடி மகிழ்கிறது இங்கு.

ஒரு வானம் சூரியனுக்கு ஒளியூட்டி மகிழும் அற்புதம் நிகழ்கிறது இங்கு.

ஒரு சரித்திரம் இன்னொரு சரித்திரத்தை எழுதிக்கொண்டாடுகிறது.

கல்விக்கருவூலம் ஒன்று செல்வக்கருவூலம் ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

காலவோட்டத்தில் நினைவோட்டங்களை விட்டும் சரிந்து போகாத பேராளுமை ஒன்று இன்னொரு தளத்தில் தன்னையொத்த பேராளுமை ஒன்றின் சரித்திரம் எழுதி வரலாறு படைக்கிறது இங்கு சந்தோசத்தோடு.

இறையில்லம் கஃபாவின் சரித்திரத்தில் நபி இப்ராஹீமும் இஸ்மாஈலும் போல தொங்கோட்டத்தில் ஸபாவும் மர்வாவும் போல

இலங்கையில் உள்ள நளீமியாவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இரண்டு தூண்கள் தான் நூலாசிரியரும் நூலில் பேசப்படுபவரும்.

ஒன்று கல்வித்தூண்
அடுத்தது செல்வத்தூண்.

இத்தகைய இரு பெரும் மாமனிதர்களை அறிமுகத்துக்காகவேணும் எழுதும் பாக்கியம் மிகப்பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன். அல்ஹம்து லில்லாஹ்.

இதற்கு மேலதிகமாக அறிமுகம் தேவைப்படாத இரண்டு மா மனிதர்கள் தான் இவர்கள் இருவரும்.

இலங்கைத்திருநாடு கண்ட மகான்கள் தான் மர்ஹூம்களான அறிவுத்தந்தை அல்ஹாஜ் நளீம் அவர்களும் கலாநிதி M.A.M. ஷுக்ரியும் என்பதை எல்லோரும் அங்கீகரிப்பர்.

மனிதபலவீனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்து பார்த்தல் மிகத்தூய்மையான மனிதர்கள் இருவரும். இருவரது வாழ்வும் மரணமும் அதற்கிடைப்பட்ட காலத்தில் ஆற்றிய மகத்தான வரலாற்றுபணிகளும் பங்களிப்புகளும் பாத்திரங்களும் அதற்கு முழுமையான சான்று.

“உங்களில் மரணித்தவர்களது நற்பணிகளை நல்ல பக்கங்களை நினைவு கூறுங்கள்” என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த வகையில் இவர்களது வாழ்வை படிப்பதும் பகிர்வதும் அவர்களுக்கு செய்கின்ற நன்றிக்கடனாகும்.

“இரண்டு விடயங்களில் தான் பொறாமை கொள்ள முடியும், செல்வம் வழங்கப்பட்டு அதனை இரவு பகலாக அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து செலவிடுபவர்.
அறிவு வழங்கப்பட்டு அதனை அல்லாஹ்வுக்காக சிறப்பாக பயன்படுத்தி தீர்ப்பு சொல்பவர்”

வேறு எதிலும் எவரிலும் பொறாமை கொள்வது அங்கீகரிக்கப்பட்டதல்ல. அனுமதிக்கப்பட்டதல்ல.

ஆக செல்வமும் அறிவும் வழங்கப்பட்டு அந்த செல்வத்தையும் அறிவையும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டும் பணியில் ஒரே தளத்தில் ஒரே குறிக்கோளுக்காக மரணம் வரை பணியாற்றிய இரண்டு ஆளுமைகள்.

கடைசி வரை அதற்காகவே சந்தித்து வாழ்ந்து சிந்தித்து மரணித்தவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்கட்டும்.

கலாநிதி மர்ஹூம் MAM ஷுக்ரி அவர்கள் மர்ஹூம் நளீம் ஹாஜியார் குறித்து எழுதிய வாழ்வியல் பக்கங்களின் தொகுப்புதான் இது.

மர்ஹூம் நளீம் ஹாஜியார் மரணிக்கும் வரை நளீமியாவுடனும் மர்ஹூம் கலாநிதி ஷுக்ரி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.

எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களின் போதும் இருவரும் ஒன்றாகவே பயணித்துள்ளனர்.

நளீம் ஹாஜியாரை வரலாறு ஈன்றெடுத்த யுக புருஷராகவே கலாநிதி பார்த்துள்ளார். அப்படி பார்க்கப்படவேண்டிய ஆளும், ஆளுமையும் தான் அவர்.

தோற்றத்தில் தொனியில் கம்பீரம். சமூகத்தொடர்பிலும் இதயத்திலும் கனிவு இதுதான் நளீம் ஹாஜியார்.

தனது கடமையை நிறைவேற்றும் பொருட்டு வெற்று புகழார வார்த்தைகளால் புகழ்ந்து தள்ளாமல், அலங்கார வார்த்தைகளால் வர்ணனைகளால் சோடிக்காமல், போலிச்சாயம் பூசாமல் உலகம் அங்கீகரித்த ஒரு மனிதனின் வரலாற்றை வாழ்வை சரிதையை இன்னொரு உலகத்தரம் வாய்ந்த ஆய்வாளர் ஆய்வு மரபுகளின் படி விஞ்ஞானமுறைப்படி ஆய்வை மேற்கொண்டால் அது எவ்வளவு கனதியாக கனத்ததாக இருக்குமோ அதற்கு நிகரான ஒரு போக்கையை நளீம் ஹாஜியாரின் சரிதையை எழுதுவதிலும் கலாநிதி அவர்கள் கையாண்டுள்ளார் என்பது சிறப்பித்து கோடிட்டு சுட்டிக்காட்ட வேண்டிய அம்சம்.

முன்னுரையுடன் சேர்த்து மொத்தம் பதினொரு தலைப்புக்களில் மொத்தம் 164 பக்கங்கள். முன் அட்டையில் நளீம் ஹாஜியாரின் ஸீனத் தெறிக்கும் அழகிய வதனம் ஒளிபாய்ச்சுவது நூலின் மீது அலாதியான ஈர்ப்பை தந்து விடுகிறது.

ஒரு தனி நபரின் சரிதையை முழுமையாக சொல்வதற்கான எல்லா அறிவார்ந்த மரபுகளையும் கையாண்டு எழுதப்பட்ட முழுமையான சரிதை நூல் எனலாம்.

பிறப்பும் இளமையும், வாழ்வில் ஒரு திருப்புமுனை, வணிகமும் வளர்ச்சியும், அந்த நாற்பத்தேழு நாட்கள், ஜாமியா நளீமியா – பாலைவனத்தில் பசும் புற்றரை, கல்வி மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவர், வரலாற்று ஆய்வுக்கு வழிவகுத்தவர், சந்திப்பின் நினைவலைகள், நளீம் ஹாஜியார் ஆளுமை பற்றிய பொது நோக்கு, வாழ்வின் அந்திம பொழுதுகள் என ஹாஜியார் கடந்து வந்த வாழ்வியல் பக்கங்களின் பிரமாதமான பக்கங்கள் தான் இங்கு எழுத்துருப்பெற்றுள்ளன.

ஆக வெறும் ஐந்தாம் தரம் வரை படித்த ஒருவர் எப்படி கலாநிதிகளை உருவாக்கி உலகப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்க முடிகிறது என்று பாருங்கள். தூய எண்ணமும் இறை உணர்வும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற அவாவும் தான் அதற்கு வழியமைக்கின்றன.

பொருளாதாரத்தில் உச்சம் தொடுகிறார். சமூகத்தின் இருப்பு குறித்து உணர்ந்து வரலாற்று எழுதுகைக்கும் ஆவணப்படுத்தலுக்கும் வித்திடுகிறார். செய்து முடிக்கிறார். கல்விக்காக குரல் கொடுக்கிறார். சாதிக்கிறார். சாதனையாளர்களை உருவாக்குகிறார். இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு விசுவாசிக்கு உலகிலும் மறுமையிலும் மகிழ்வடையவும் இறைவனை திருப்திப்படுத்தவும் ?

ஒவ்வொரரு முஸ்லிமும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது.

இதற்கு மேல் நீங்களே புத்தகத்தை வாசிப்பது மட்டும் தான் மிச்சம்.

வரலாறு, வாழ்க்கை சரிதை இரண்டுக்கும் இடையிலான கட்டிறுக்கமான உறவை G.Wright Mills எனும் நவீன சமூகவியலாளரின் மேற்கோளைக்கொண்டு முன்னுரையை ஆரம்பிக்கிறார். wright சரியாகத்தான் சொல்லியுள்ளார். நளீம் ஹாஜியாருக்கே சொன்னது போல உள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சுயசரிதை தொகுப்பு வரலாற்றில் பங்களிப்பு செய்த நூல்களையும் இங்கு நினைவுகூர்கிறார் கலாநிதி ஷுக்ரி.

இப்னு கல்லிகானின் வபயாதுல் அஃயான் கலாநிதி அவர்கள் அடிக்கடி நினைவு கூறும் நூல். வரலாற்றில் தோன்றி மறைந்த முக்கியஸ்தர்கள், முக்கிய புள்ளிகளின் சரிதையை தொகுத்துக்கூறும் நூல்களின் கனதிக்கு ஒப்ப இங்கு நளீம் ஹாஜியார் குறித்த பார்வை நூலாசிரியருக்கு உள்ளது என்றால் எந்தளவு ஆழமாக நளீம் ஹாஜியாரை புரிந்து வைத்துள்ளார் நளீம் ஹாஜியாரை கூர்ந்து அவதானித்து வாசித்துள்ளார் என்பது தெரியும்.

பதிலுக்கு நளீம் ஹாஜியாரும் கலாநிதி ஷுக்ரியின் அந்தஸ்தை மகிமையை மிக நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.

”அவரது பாரத்துக்கு நிகரான தங்கத்துக்கு விலை பேசிவந்தாலும் நளீமியா தவிர்ந்த வேறெந்த கலாசாலைக்கும் அவரை விட்டுக்கொடுக்க தயாராகவில்லை”
என்பதை அவரே தனது உரையில் பகிரங்கமாக கூறியுள்ளார்.

Oxford பல்கலைகழகத்தின் அரபுப்பேராசிரியர் D.S. Margolioth கூறும் மேற்கோள் எவ்வளவு அற்புதமானது.

“அரபு மக்களின் வாழ்க்கை சரிதை இலக்கியம் மிக வளமுள்ளது. பக்தாத்தில் யாராவது புகழ்பெற்ற மனிதர் மரணித்தால் அவரது வாழ்க்கை சரிதை நூல்களுக்கென்றே ஒரு சந்தை உருவாகும். இந்த நிலை ஐரோப்பிய தலை நகர்களிலும் காணப்படுகிறது……… மரணித்தவர்கள் பற்றிய வாழ்க்கை சரிதைகள் மட்டுமன்றி உயிர் வாழ்பவர்களது வாழ்க்கை சரிதைகளும் காணப்பட்டன. இவ்வாறு தொகுக்கப்படும் வாழ்க்கை சரிதை நூல்களில் இலக்கிய வளம் மிக விசாலமானது.”

மேற்கோளை அப்படியே நளீம் ஹாஜியார் உயிர்வாழும் போதே அமுலாக்கியுள்ளார். இதுதான் ஆளுமைகள் பற்றிய ஆளுமைகளின் பார்வையும் பதிவும்.
ஆனால் நூலைக்காணுமுன் ஹாஜியார் மரணித்துவிட்டார்கள்.

ஷஹீத் செய்யித் குத்ப் சொல்வது போல “தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காக வாழும் போது வாழ்வின் பெறுமதி இரட்டிப்பாகிறது.”

ஹாஜியார் தலைமுறை கடந்து வாழ்ந்துள்ளார்கள்.

சமூகத்துக்காக அதன் நன்மைக்காக விடிவுக்காக விமோசனத்துக்காக வாழ்ந்தால் நிச்சயம் வரலாறு நெடுகவும் அந்த சமூகம் நினைவூட்டும். கொண்டாடும். அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தும். கையளிக்கும்

நளீம் ஹாஜியார் விடயத்தில் கலாநிதி ஷுக்ரி அத்தகைய வரலாற்று பங்களிப்பைத்தான் இந்த நூல் மூலம் சமூகத்துக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

தனக்கு இறைவன் அருளிய செல்வத்தை அள்ளி அள்ளி செலவிட்டு மக்கள் மனங்களில் வாழ்ந்து மகத்தான தாக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

நளீம் ஹாஜியார் வீர புருஷரும் அல்ல. வீரவணக்கத்தை அவர் விரும்பவுமில்லை. அதனால் தான் இப்படி ஒரு நூலை எழுத உள்ள தனது விருப்பத்தை முன்வைத்த போது அதற்கு உடன்படவில்லை என்று கலாநிதி ஷுக்ரி கூறுகிறார்.

இது வாழும் தலைமுறைக்கும் அடுத்து வர உள்ள தலைமுறைக்கும் உணர்வூட்டும் ஆக்கமாக படிப்பினையாக அமையும் என்பதை விளக்கிய போது தான் அதற்கு உடன்பட்டார்.

ஏழ்மையின் அகோரப்பிடியில் சிக்கி வறுமையின் கோரத்தாண்டவத்தை சொட்டுச்சொட்டாக பருகி வயிறை நிரப்பி வாழ்வில் படிப்படியாக முன்னேறி வறுமையின் அடித்தட்டில் இருந்தது போல செல்வச்செழிப்பின் உச்சத்தை சிகரத்தை தொட்டார் ஹாஜியார்.
செல்வந்தர்களின் இயல்பான பெருமை அவரிடம் இருக்கவில்லை. கல்வியை அறிஞர்களை அவமதிக்கும் பண்பு இருக்கவில்லை.

இதற்கு தலைகீழாக பணிவு அவரிடம் குடிகொண்டது. அறிவை அறிஞர்களை நூலை நூலகத்தை மிகவும் நேசித்தார், மதித்தார்.

வறுமையின் அகோரப்பிடிக்குள் சிக்குண்டு அதன் வெறித்தனத்தை அனுபவித்து கசப்பான பானத்தை மிடர்மிடராக குடித்து வளர்ந்தவன் தான் நானும். வறுமை எவ்வளவு கொடூரம் என்பதை எனக்கு கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் நளீம் ஹாஜியாரின் வறுமை எனது வறுமையை விடவும் வேறுபட்டது. வித்தியாசமானது. சோகம் நிறைந்தது. பாரமானது.

ஆனால் வறுமை வாழ்வு குறித்து புலம்பவுமில்லை. செல்வச்செழிப்பு குறித்தான பெருமிதமும் அகங்காரமும் ஆணவமும் கொண்டு தம்பட்டம் அடிக்கவுமில்லை.

இல்லாத போது எப்படி இறைவனை சார்ந்து வாழ்ந்தாரோ இருக்கும் போதும் அவனிடமே தவக்குல் வைத்து வாழ்ந்தார்.

செல்வத்தால் அல்லாஹ் அவரை சோதித்தான். செலவழித்து அந்த சோதனையை மிகைத்தார். இதுவே அவரது வாழ்வின் வெற்றி.

மேலே பேசப்படும் எல்லா தலைப்புகளையும் அதன் உள்ளடக்கத்தை விடவும் என்னை வெகுவாக கவர்ந்த தாக்கம் செலுத்திய தலைப்பு அந்த 47 நாட்கள் தான்.

மனித வரலாறுகளை சரிதைகளை ஓரளவு வாசித்துள்ளேன். அவர்கள் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட கசப்பான பக்கங்களும் அதனை அவர்கள் எதிர்கொண்டு மனம் தளராமல் வெற்றிகொண்ட விதத்தை வைத்து அவர்களது ஆளுமையை தீர்மானிக்க முடியும். ஓர் இறை விசுவாசியை பொறுத்தளவில் அவனது கொள்கையை அதன் மீதான விசுவாத்தை உரசிப்பார்க்கும் உரைகல் பலமான தொடரான எதிர்பாராத சோதனைகள் தான்.

பொதுவாக நபிமார்களும் குறிப்பாக உலுல் அம்ர் எனப்படும் திடகாத்திரம் பூண்ட ஐம்பெரும் தூதர்களும் பின்னால் வந்த மாபெரும் இமாம்களும் இஸ்லாமிய எழுசிப்போராளிகளும் இத்தகைய சோதனைகளை கடந்துதான் பயணித்துள்ளனர்.

நபி யூஸுப் அலை, இமாம் இப்னு தைமியா மௌலானா மௌதூதி (ரஹ்), ஷஹீத் ஸையித் குத்துப் (ரஹ்) போன்றவர்கள் நீண்ட சிறை வாசத்தை அனுபவித்தவர்கள்.

அந்த வகையில் நளீம் ஹாஜியாரினதும் சிறைவாசம் அதற்கான காரணிகள் அதன் போது தன்னுள்ளும் தனக்கு வெளியிலும் உலகத்திலும் தனக்காக தனது விடுதலைக்காக நிகழ்ந்த மர்ம மாற்றங்கள் அதன் தாக்கங்கள் பிரதிபலிப்புகள் குறித்து பேசுகின்றது மேற்படி தலைப்பு .

கண்ணீர் வராமல் நீங்கள் இத்தகைய பக்கங்களை கடந்தால் உங்கள் கல்புகளை கொஞ்சம் பரீட்சித்துப்பார்த்து அதில் கொஞ்சம் ஈரத்தையும் இரக்கத்தையும் வேண்டி இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

அய்யாஷின் சரித்திரத்தை கூறும் பூகம்பம் நூலின் ஆசிரியர் நிகழ்வுகளுக்கு உரம் சேர்க்கும் அல்குர்ஆன் வசனங்களை கொண்டுவருவது போல இங்கும் அல்குர்ஆன் வசனங்கள் மூலம் மேற்கோள் காட்டப்பட்டிருப்பது நளீம் ஹாஜியாரின் ஆன்மீக வாழ்வை பிரதிபலிக்கிறது.

உண்மையில் அவர் ஆன்மீக மனிதர். அல்குர்ஆனிய மனிதர். தனது செல்வத்தால் போராடிய தெய்வீக رجل رباني جاهد بماله மனிதர் “ரஜ்லுன் ரப்பானிய்யுன் ஜாஹத பிமாலிஹி” என்று துணிந்து கூறலாம்.

அல்லாஹ் வழங்கிய செல்வத்தைக்கொண்டே அல்லாஹ் சோதித்தான். சோதனையில் பகிரங்க வெற்றி பெற்றார். இத்தகைய மனிதர்களின் பாக்கியம் தான் இந்த பூமி இன்னும் பசுமையாக இருப்பது.

இப்னு கல்தூனையோ ஷாஹ் வலியுல்லாஹ்வையோ கற்காவிட்டாலும் அவர்கள் முன்வைக்கும் சமூக அழிவிற்கும் வீழ்ச்சி நிலைக்குமான காரணிகளை உணர்ந்து செல்வத்தால் தீமையில் விழாமல் இறை உணர்வாலும் உதவியாலும் தன்னை தற்காத்துக்கொண்டார்.

கைது செய்யப்படுவதற்கு முதல் அதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது முதல் போலியான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து நிரபராதி என கூறி விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் வரை நிகழ்ந்த அனைத்தையுமே நேரடி வர்ணனை போல கூறிச்செல்கின்றார் கலாநிதிதி ஷுக்ரி கனத்த இதயத்துடனும் கண்ணீராய் வடியும் வார்த்தைகளுடனும்.

“பேருவளையை சேர்ந்த மாணிக்க வியாபாரி நளீம் ஹாஜியார் அவர்கள் வெளிநாட்டு செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். எனவே இத்தால் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படுவதோடு அவரது கடந்த பத்து வருடகால வியாபார கணக்குகளை சமர்பிக்கும் படியும் அவர் கோரப்படுகிறார். அவர் எங்கிருந்தாலும் விசாரணைக்காக அவரை கைது செய்யும்படி இலங்கையில் உள்ள எல்லா போலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்ற செய்தி 1974 ம் ஆண்டு வரவு செலவு சமர்பிக்கப்பட உள்ள தினத்தில் ஒலிபரப்பானதை தானே செவிமடுக்கும் போது எவ்வளவு துடித்துப்போயிருக்க வேண்டும்! தூக்கிவாரிப்போட்டிருக்க வேண்டும்!

சரியாக 47 நாட்களின் பின்னர் வெளியான பின்வரும் செய்தி கேட்டு தடுப்புக்காவலில் இருந்து எவ்வளவு மகிழ்ந்திருப்பார்.

“நளீம் ஹாஜியார் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்: ஒரு சிறு குற்றச்சாட்டு கூட குற்றஞ்சாட்ட அவர் மீது இருக்கவில்லை” தினகரன் 31.01.1979

பிறப்பு முதல் அவர் கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களும் ஏற்ற இறக்கங்களும் இன்பமும் துன்பமும் இழப்பும் தவிப்பும் இங்கு அற்புதமான காவியமாக படைக்கப்பட்டுள்ளது.

போலியான பாசாங்கான எந்த ஒன்றும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி உணர்ந்து எழுதியுள்ளார். கலாநிதி மர்ஹூம் ஷுக்ரி அவர்கள்.

இலங்கை முஸ்லிம்களின் சமய சமூக கல்வி பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களித்த வாப்புச்சி மரிக்கார், சித்தி லெப்பை, அஸீஸ், பதியுதீன் மஹ்மூத், TB ஜாயா போன்ற மகான்களின் வரிசையில் உள்ளடக்கப்படுவதற்கு மிகவும் தகுதியும் தராதரமும் உள்ள ஒரு மா மனிதன் தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.

தனது அந்திம பொழுதுகளை தள்ளாடித்தள்ளாடி கழித்தும் சமூக உணர்வு இறுதி மூச்சுவரை அவரில் ஆழ வேரூன்றி இருந்தது.

கொழும்பு அபலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்த போது அங்கு அன்றைய பிரதமர் திரு மஹிந்த ராஜபக்ஷ உடனே வைத்தியசாலை விரைந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலை
நிகழ்ந்த
அன்னாரின் மரணமும் அதற்காகத்திரண்ட சமுத்திர வெள்ளமும் அதற்கு சான்று.

பல்லாயிரக்கணக்கான மனிதர்களதும் மாணவர்களதும் பிரார்த்தனை சகிதம் அவரது ஆசைப்படி நளீமியா வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறைந்தபட்சம் கல்வி அமைச்சின் இஸ்லாமிய பாடத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு மிகவும் தகுதியானவர் தான் நூலின் பிரதான கதாபாத்திரம் அறிவுதந்தை மர்ஹூம் நளீம் ஹாஜியாரும் நூலாசிரியர் மர்ஹூம் கலாநிதி M.A.M. ஷுக்ரி அவர்களும்.

நூலறிமுகம் : ஆய்வாளரும் நூல் விமர்சகருமான M.M.A.BISTHAMY.

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top