News

தேசத்தை கட்டியெழுப்புதல் முஸ்லிம்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பு.

தேசத்தை கட்டியெழுப்புதல் முஸ்லிம்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பு

நான் ஒரு முஸ்லிம் என்றவகையிலும் இலங்கையன் என்ற வகையிலும் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து ஷரீஆ ஒரு விரிந்த பார்வையை தந்துள்ளது. அந்த வகையில் நாம் ஏன் தாய்நாட்டுக்கு அல்லது வாழும் பூமிக்கு கடமைப்பட்டுள்ளளோம் என்பதை பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்.

1) பூமியை வளப்படுத்தி அபிவிருத்திப் பணியில் ஈடுபடுவதே மண்ணின் மீது மனிதனுக்குள்ள உறவு என அல்குர்ஆன் கூறுகிறது. ‘அவன்தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வளப்படுத்துமாறு அவன் உங்களை வேண்டியுள்ளான்’ (ஸுரா ஹுத் 61)

2) அடுத்த மனிதனுக்கு பயனுள்ளவனாக வாழவேண்டும் என்பதே சக மனிதன் பால் உன்மீதுள்ள உறவாகும் என இஸ்லாம் கற்றுத்தருகிறது. ‘பயனுள்ள கருமங்களை செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்’ (ஸுரா ஹஜ்: 77). நபிகளாரின் வருகை பற்றி அல்-குர்ஆன் கூறும்போது ‘நாம் உம்மை அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்’ என்றே கூறுகிறது. நாம் பிறருக்கு அருளாக இருக்கவேண்டும். பிறக்கு பயனுள்ளவன் இஸ்லாத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுகிறான் என்பதையே அல்-குர்ஆன் விளக்குகிறது.

3) ‘அவர்களுக்கு மிகவும் உசிதமானது கட்டுப்படுவதாகும். மேலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதுமாகும்’ என்ற அல்குர்ஆன் வசனம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பொதுவாக கட்டுப்பட்டு நடப்பது இஸ்லாம் வலியுறுத்தும் உயர்ந்த பண்பாடாகும் என்பதை பறைசாற்றுகிறது. நாட்டின் சட்டத்தை புறக்கனித்து வாழ முடியாது என்பதையே இது சுட்டுகிறது. சட்டத்தின் தவறுகளை பேசுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனால் அதற்காக கட்டுபாடின்றி வாழ்வது தர்மம் அல்ல என்பதே இஸ்லாத்தின் போதனையாகும்.

4) தான் வாழும் நாட்டின் அரசுடன் அவனுக்குள்ள உறவு குறித்து அல்-குர்ஆன் தெளிவாக வழிகாட்டியுள்ளது. ஆக்கபூர்வமான நல்ல விடயங்களில் ஒத்துழைக்குமாறு இஸ்லாம் பணித்துள்ளது. மனித நலன்களை காக்கும் அல்லது தீமைகளை ஒழிக்கும் திட்டங்களில் அரசுடன் ஒத்துழைப்பது வரவேற்கத்தக்க நல்ல விடயம் என்பதே இங்கும் அல்குர்ஆன் விளக்குகிறது.

5) தேச ஒருமைப்பாடு, நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, சுதந்திரத்தை காக்கும் வகையில் நாட்டுக்கா உழைப்பது கண்டிப்பான தேவை என்றே இஸ்லாம் போதிக்கிறது. ‘ மரணித்திற்கு பயந்து தனது நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கா எண்ணிக்கையில் வெளியேறுகிறார்களே! அவர்களை நீர் பார்த்தீரா? அல்லாஹ் அவர்களை நோக்கி நீங்கள் மரணித்து விடுங்கள் எனக் கூறினான்.’ (ஸுரா பகரா: 243) நாட்டை பாதுகாக்காமல் கோழைகளாக பிடரியில் கால்பட ஓடுவது செத்துப் போவதற்கு சமனாகும்.

ஒரு சமூகம் தனது தேசத்தின் சுதந்திரத்திற்காக அல்லது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம், அச்சமூகம் தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என இஸ்லாம் கருதுகிறது. அதேபோன்று யாரெல்லாம் தனது நாட்டின் விடுதலைக்காக, எழுச்சிக்காக மற்றும் தனித்துவத்திற்காக போராடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் இறந்த பிணங்களுக்கு சமமானவர்கள் என்ற கருத்தையே அல்குர்ஆன் மேற்குறிப்பிட்ட வசனத்தில் சுட்டிக் காட்ட முனைகிறது என கலாநிதி முஹம்மத் இமாரா விளக்குகிறார்.

அல்குர்ஆனின் பார்வையில் தேசம்

தேசத்தின் மீதான நேசமும் தன் உயிர் மீதான பற்றும் சம அந்தஸ்துடையதாகவே அல்குர்ஆன் கூறுகிறது. ஸூரா அந்நிஸாவின் 66 வது வசனத்தில் அல்லாஹ் தஆலா ‘நீங்கள் உங்களை கொலை செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களது பூமியிலிருந்து வெளியேறிச் சென்று விடுங்கள் என அவர்களுக்கு விதித்த போது, அவர்களில் மிகச் சிலரே அதனை செய்யக் கூடியவர்களாக இருந்தனர்’ என்கிறான்.

இங்கு ஒரு மனிதனை கொலை செய்வதனையும், அவன் நாட்டை துறந்து வெளியேறி விடுவதனையும் அல்லாஹ் சம தரத்தில் உள்ள தண்டனையாக நோக்குவதனை அவதானிக்கலாம். அதாவது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் என்பது ஒரு மனிதனின் உயிருக்கு சமனானது என அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிகளாரின் தேசப்பற்று

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். ஆனால் மக்காவாசிகளின் எல்லைமீறிய கொடுமைகள்; நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட சோகம் கலந்த வார்த்தைகள் மக்கா மண்ணின் மீதுள்ள அவர்களது நேசத்திற்கு சான்றாக அமைந்தன.

நபிகள் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி ‘மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்’ என்று கூறினார்கள்.

நபிகளார் மக்காவை விட்டும் விரட்டப்படுவார்கள் என வரகத் பின் நௌபல் எதிர்வு கூறியபோது இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு அதனை நம்ப முடியவில்லை. மிகுந்த ஆச்சரியத்தில் நான் பிறந்து வளர்ந்து ஒன்றாகக் கூடிப் பழகி வாழ்ந்த இந்த மண்ணிலிருந்து ‘அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா? என்று கேட்டார்கள். இது நபியவர்கள் தேசத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக வெளிப்பட்ட வார்த்தையாகும்.

நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்: ‘யா அல்லாஹ் நீ எங்களுக்கு மக்காவை நேசத்திற்குரிய பூமியாக மாற்றியது போன்று, மதீனாவையும் மாற்றித் தருவாயாக அல்லது மக்காவை விட நேசத்திற்குரிய பூமியாக மதீனாவை மாற்றித் தருவாயாக’ (புகாரி)

நபியவர்களும் மனித உணர்வுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்ற வகையில், அவரிடமிருந்தும் தேசப்பற்றும், தேசிய உணர்வும் தேசத்தை நேசிக்கும் வார்த்தைகளும் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய நோக்கில் தேசம் பெறும் அந்தஸ்து

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் பெறும் வகிபாகத்தை பற்றி அல்லாமா யூசுப் அல்-கர்ளாவி அவர்கள் குறிப்பிடும் போது ‘இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் தேசத்தை சார்ந்து நிற்கும் உணர்வை அது அங்கீகரிக்கின்றது’ என்றும்; ‘இஸ்லாம் எப்போதும் மனித இயல்புகளை மதிக்கிறது. இந்த வகையில் ஒரு மனிதனின் தேசிய உணர்வையும் தேசத்தை சார்ந்து நிற்கும் மனோநிலையையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது’ என்றும்; ‘தேசப் பற்று என்பது மனித இயல்பூக்கத்தை சார்ந்தது. இதில் காபிர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் உடன்படுகின்றனர்’ என்றும் கலாநிதி கர்ளாவி அவர்கள் அல்வதன் வல்முவாதன் என்ற நூலில் விளக்குகிறார்.
அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னனா (ரஹ்) அவர்கள் தேசப் பற்று குறித்த இஸ்லாத்தின் பார்வையை பின்வருமாறு அடையாளப்படுத்துகிறார்.

1. மனித இயல்பின் அடிப்படை என்ற வகையில் பிறந்த பூமியை நேசித்தல் தவிர்க்க முடியாது. எனவே அதனை இஸ்லாம் வரவேற்கின்றது.

2. தாய்நாட்டை பாதுகாத்து விடுதலைக்காக போராடுவதும் தனது நாட்டு மக்கள் கண்ணியமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையில் எழும் தேசிய உணர்வு பாராட்டுக்குரியது. அது தார்மீகக் கடமையும் கூட.

3. பல்லின சமூத்தில் இணங்கி, தேசிய நலனுக்காகவும், நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் தேசியவாதத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

4. சமூகங்களுக்கு தனது நாடு அனுபவிக்கும் நலன்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் நிலங்களை வெற்றி கொண்டு மக்கள் வளமாக வாழ வழிகாட்டும் வகையில் தோன்றும் தேசியவாதத்தையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

மேற்குறித்த நான்கு பரப்புக்களிலும்; தேசிய உணர்வை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. அத்தகைய உணர்வில் தேசத்திற்காக பாடுபடுவதனை இஸ்லாம் வரவேற்கின்றது. அந்தப் பாதையில் மரணிப்பதானது அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பதற்கு சமனானதாக இஸ்லாம் நோக்குகிறது.

ஒரே சமூகத்தை பௌதீக ரீதியாக துண்டாடி பல கூறுகளாக பிரிக்கும் தேசிய உணர்வு போலியானது. ஒரே உம்மத்தான முஸ்லீம் உம்மத்தை போட்டி, பொறாமை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தி பலவீனப்படுத்தும் நோக்குடன் இயங்கும் தேசியவாதம் மறுதலிக்கப்ட வேண்டியதாகும். சத்தியத்திற்hக பிரிந்தும் அசத்தியத்திற்காக கூட்டுச் சேரும் போலியான தேசிய உணர்வால் யாருக்கும் இலாபமில்லை என்பதை ஹஸனுல் பன்னா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

தேசிய உணர்வின் முழுமையான வடிவம்

நாட்டுப் பற்று, தேசிய உணர்வு என்பது ஒரு மனிதன் தனது பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிட மாட்டாது. அதற்கு அப்பால் அவன் தன் நாட்டு மக்களை நேசிப்பான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் நாட்டு நலனுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் விடுதலைக்காக போராடுவது உண்மையான நாட்டுப் பற்றாகும். தேசப் பற்று குறித்த அல்குர்ஆனிய சிந்தனையும் இதுவே. நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு அடையாளம். எனவே தான் உமர் (ரழி) அவர்கள் தேசப்பற்று காரணமாக நாடுகள் வளமாகின்றன என்று கூறினார்கள்.

நாட்டிலிருந்து பல விடயங்களை, வளங்களைப் பெற்று அனுபவித்துள்ளோம். இப்போது நாம் நாட்டுக்கு எதை திருப்பி வழங்கப் போகிறோம் என்று சிந்திப்பதே உசிதமானது. அந்த வகையில்:

• நாட்டை மனதார நேசிப்போம். அதன் எதிர்கால சுபீட்சத்திற்காக கைகோர்த்து செயற்படுவோம்.

• நிலையான சமாதானம், சமூக நல்லிணக்கம், சகவாழ்வு, பரஸ்பரபுரிந்துணர்வு ஆகியவற்றை மேலோங்கச் செய்வோம்.

• சட்டம் ஒழுங்கைப் பேணி ஒழுகும் கலாசாரத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஸ்திரப்படுத்துவோம்.

• தேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திற்கும் பொது அமைதிக்கும் நிலையான அரசியல் தீர்வுக்கும் மனப்பூர்வமாக பங்களிப்பு செய்வோம்.

• பண்பாட்டுச் சூழல் மாசடைவது குறித்து அதிக கவனம் செலுத்தும் நாம் பௌதிக சூழல் மாசடைவது குறித்தும் அதிக அக்கறை கொள்வோம்.

தேசப்பற்று, தேசிய உணர்வு என்பது இயல்பானது. அதனை ஷரீஆ அங்கீகரிக்கின்றது. அதனால் நாடு வளம் பெறுகின்றது. பிரிவையும் பிளவையும் ஏற்படுத்தும் தேசியவாதத்தை இஸ்லாம் மறுதலிக்கின்றது என்பது தேசியம் குறித்த இஸ்லாமிய சிந்தனையாகும்.

எனவே இந்தப் பின்ணணியில் இலங்கை சூழலில் வாழும் முஸ்லிம்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் உண்மையான உணர்வோடு பங்களிப்பு செய்வது ஒரு தார்மீகக் கடமையாகும்.

-முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)-

– – – – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top