Musilm

பாரம்பரியம் : ஆளுமைகளின் கூடம்.

பாரம்பரியம்

19/07/2022 செவ்வாய் இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரில் மூத்த எழுத்தாளரும், அந்நாட்களில் ஒலிபரப்பான முஸ்லிம் நிகழ்ச்சிகளில் நேரடி ஒலிப்பதிவு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பல பாடியதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலாபூஷணம் பாயிஸ் ஜிப்ரி கலந்து கொண்டதோடு முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்த இவரது பெயரினை ஒத்த இன்னும் ஒரு பிரபலமாக திகழ்ந்த பிரபல வானொலி நாடக எழுத்தாளர், பிரபல பட்டயக் கணக்காளர் போர்வையூர் ஜிப்ரி அவர்களது நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.

மர்ஹூம் போர்வையூர் ஜிப்ரி பற்றிய மேலதிக தகவல்களை அவரது மகள் பாத்திமா ரிபாஸா ஜிப்ரி அவர்களும் கலந்து கொண்டு தன் தந்தையின் நினைவுகளை நேயர்களோடு பகிர்ந்து கொண்டார்.

இவர்களை நேர்காணல் செய்தார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள்.

போர்வை பாயிஸ் ஜிப்ரி தன்னைப் பற்றி கூறுகையில்:-

நான் பிறந்த ஊர் தென்னிலங்கையைச் சேர்ந்த போர்வை என்பதாகும். எனது மனைவியின் பெயர் சித்தி கமறுன் நிஷா ஜிப்ரி. எங்களுக்கு நான்கு ஆண்கள், இரண்டு பெண் பிள்ளைகள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவன். எனது முதலாவது கட்டுரை எனது பதினாறாவது வயதில் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது.

என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தான் மர்ஹூம் போர்வையூர் எம். எஸ். எம். ஜிப்ரி அவர்கள். அவரும் நானும் சிறந்த நண்பர்கள். கலைத் துறையில் எனக்கு பல உதவிகள் செய்தவர். அந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வரும் குமுதம், கல்கண்டு போன்ற புத்தகங்கள் வாங்கினால் எனக்கும் வாசிக்கத் தருவார். அந்த வாசிப்புப் பழக்கம் தான் என்னை ஒரு எழுத்தாளனாக ஆக்கியது, எழுதவும் தூண்டியது.

என்னை முஸ்லிம் சேவையில் பங்குபற்ற வைத்த அந்த காலத்தில் பொறுப்பாளராக இருந்த காமில் மரைக்கார் அவர்களை மறக்க முடியாது. அவர் ஒரு முறை போர்வை என்ற எங்கள் ஊருக்கு வந்தார். வருடா வருடம் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதை ஒலிப்பதிவு செய்வதற்காக மர்ஹூம் காமில் மரைக்கார் அவர்கள் வருவார். அவரை எனக்கு கொஞ்சம் பழக்கம் இருந்தது. ஒரு முறை எங்கள் ஊருக்கு வந்த போது “ஜிப்ரி நீங்கள் நன்றாக பாடுவீர்கள் தானே ஒரு பாட்டு பாட முடியுமா” என்று கேட்டார்? நானும் பாடினேன். அது நேரடி ஒளிபரப்பாக அமைந்தது. அவர் சொன்னார் இந்த பாடல் இரண்டு நாட்களின் பின்னர் ஒலிபரப்பாகும். இன்னொரு பாடல் பாட முடியுமா என்று கேட்டார்?இரண்டாவது பாடலையும் பாடினேன்.

மேலும் திக்வல்லை ஸப்வான் வழங்கும் “சஞ்சாரம்” நிகழ்ச்சிக்கு நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறேன். அத்தோடு முன்னர் ஒலிபரப்பாகிய “கவிதைச்சரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதைகள் பாடி இருக்கிறேன்.

போர்வையூர் ஜிப்ரி குடும்பம் பற்றி அவரது மகள் பாத்திமா ரிபாஸா குறிப்பிடுகையில்:-

போர்வையூர் ஜிப்ரி எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் சாபி மொஹமட் ஜிப்ரி ஆகிய எனது தந்தை 1941 ஆண்டு போர்வை எனும் ஊரில் பிறந்தார். தனது ஊரான போர்வையில் படிப்பை ஆரம்பித்து அதன் பிறகு அளுத்கம, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் மேலதிக படிப்பை முடித்த பிறகு “Charted Accountant” வரை கல்வி கற்று அந்த துறையில் ஈடுபட்டு எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்த்தார்.

1968 ஆம் ஆண்டு தலாப்பிட்டியவைச் சேர்ந்த பாத்திமா சிபுதானியா என்ற எனது தாயை திருமணம் செய்தார். மூன்று பெண்குழந்தைகளுக்கும் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார். நான் குடும்பத்தில் நான்காவது பிள்ளை. எனது கணவனின் பெயர் மொஹமட் நிஷாட் “Chartered Accountant” ஆக பணி புரிகிறார். எனக்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. எனது தந்தை அல்ஹாஜ் ஜிப்ரி அவர்கள் தமிழ் இலக்கிய பாடத்தில் மிகவும் ஆர்வம் காட்டியவர். 1955 ஆம் ஆண்டுகளிலிருந்து இலங்கை வானொலி முஸ்லிம் சேவையோடு இணைந்து நாடக எழுத்தாளராக நாடகத்துறைக்குள் நுழைந்தார்.

போர்வையூர் ஜிப்ரி முஸ்லிம் சேவையுடனான தொடர்புகள் பற்றி பாயிஸ் ஜிப்ரி குறிப்பிடுகையில்:-

போர்வையூர் ஜிப்ரி அவர்கள் முஸ்லிம் சேவையோடு நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார். அவர் எழுதிய நாடகங்களை எனக்குக் காட்டுவார். அவரது வேலை பளு காரணமாக எழுதுவது குறைவு. உங்கள் நாடகங்கள் நன்றாக இருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் என்று சொன்னேன். சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் என பல நாடகங்கள் எழுதி இருக்கிறார். அவரது தரமான நாடகங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றன. ஒரு முறை என்னை கலையகத்துக்கு அழைத்து வந்து வீ. ஏ. கபூர் ஸேரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலமாக வானொலியில் பாட சந்தர்ப்பம் கிடைத்தன.

உண்மையிலேயே ஜிப்ரி அவர்கள் நல்ல திறமைசாலி. நல்லதொரு எழுத்தாளர். எனது நெருங்கிய நண்பர். நான் கொழும்பில் இருக்கும் காலமெல்லாம் ஒவ்வொரு நாளும் என்னோடு தொடர்பு கொள்வார். ஊருக்குப் போவதாக இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம். இப்படியான ஆத்ம நண்பன். உண்மையிலேயே போர்வையூர் ஜிப்ரி அவர்கள் ஒரு பண்பாளர், அன்பாளர், எளிமையானவர். அவரிடம் பெருமை என்று கொஞ்சமும் இல்லை. உடை கூட எளிமையாகவே அணிவார். எப்போதும் சிரித்துப் பேசுவார். கொஞ்சம் ஹாஸ்யப் போக்கு இருந்தது. அவர் கோபப்பட்டு நான் என் வாழ்க்கையில் கண்டதே இல்லை.

தனது தந்தை எழுதிய நாடகங்கள், பங்கேற்ற கலைஞர்கள் பற்றி அவரது மகள் குறிப்பிடுகையில்:-

எனது தந்தை எழுதிய நாடகங்கள் நினைவில் இல்லை. தெரிந்து வைத்திருப்பதை சொல்கிறேன். பிள்ளைகள், மாணிக்கம், புலரும் பொழுதில், கோமாளிகள், உதவிக்கு வந்தவர்கள், நிழலின் அருமை என்று நாடகத் தலைப்புகளை கூறினார். எம். எச். குத்தூஸ், அஷ்ரப் கான், குலாம் ரஷீத், ரஷீத் எம். ஹபீல், எம். இர்ஃபான் ஆகியோர் என் தந்தையின் நாடகங்களை தயாரித்தளித்தனர். பீB. எச். அப்துல் ஹமீத், கே. ஏ. ஜவாஹர், கே. எம். ஏ. மொஹிதீன், ஆமினா பேகம், சித்தி நிஹாரா சபூர்தீன், ஞெய் ரஹீம் ஸஹீட், நூர்ஜஹான் மர்சூக், புர்கான் பீB. இப்திகார் இன்னும் பல பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் என் தந்தையின் நாடகங்களில் குரல் கொடுத்திருப்போரே இவர்கள்.

இடையில் பாயிஸ் ஜிப்ரி அவர்கள் குறுக்கிட்டு போர்வையூர் ஜிப்ரி அவர்கள் என்னிடம் “ஜிப்ரி எழுத்துத் துறையில் நாம் முன்னேறுவதற்கு முஸ்லிம் சேவை நிறைய சந்தர்ப்பங்கள் அளித்தது” என்று அடிக்கடி சொல்லுவார். இதை அவரது மகளும் உறுதி படுத்தினார். எனது ஆத்ம நண்பனுமான போர்வையூர் ஜிப்ரி அவர்கள் 2015 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் வபாத்தானார். உண்மையிலேயே எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி விட்டு அவர் இறையடி சேர்ந்தார். அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக.

போர்வையூர் ஜிப்ரி அவர்களது மகளிடம் உங்கள் தந்தையைப் பற்றி வேறு ஏதும் சொல்ல நினைக்கிறீர்களா என்று கேட்ட போது?

எனது தந்தை அமைதியான ஒருவர். நேர்மையான வாழ்க்கையே வாழ்ந்தார். ஆடம்பரம் எதுவும் இல்லை. அவர் எங்கள் நான்கு பேருக்கும் கற்றுத் தந்த விசயம் பொறுமை.
உண்மையைச் சொல்லப் போனால் அவர் இருப்பது போலவே இன்றும் நினைக்கிறோம். அவர் மறைவை எங்களால் மறக்க முடியாது. அவர் எங்களை நன்றாக வைத்து விட்டுத் தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
என்று கூறி முடித்துக் கொண்டார்.

மறைந்த மறக்கடிக்கப்பட்ட
நமது முன்னோர்களில் ஆளுமைகளை அடையாளம் கண்டு
பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்கள். அவரது இந்த அரும் பணிக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும், முஸ்லிம் சேவை பணிப்பாளர் சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எங்களது பாராட்டுக்களும் நன்றிகளும்.

✍🏼 எம். வஸீர் வாழைத்தோட்டம்.

மேலும் வரலாற்று நிகழ்வுகளைப் பெற்றுக்கொள்ள, எமது Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top