Other Events

பாரம்பரியம்

பாரம்பரியம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் (27/06/2017)

செவ்வாய் இரவு 08.15 மணியளவில் முஸ்லிம் சேவை பாரம்பரியம் (Click) நிகழ்ச்சியில் கவிஞர் அல் அஸூமத் அவர்கள் கலந்து கொண்டார்.

Nikalvumedai

கவிஞர் அல் அஸூமத்.

இன்றைய பாரம்பரியத்தில் தனது பசுமையான நினைவுகளை மீட்ட எமது அதிதியாக அழைத்து வந்திருப்பது தமிழ் மாமணி, கவிஞர் தாரகை கவிஞர் அல்அஸூமத் அவர்களை.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சுமார் நான்கு வருட காலமாக
“கவிதைச்சரம்” எனும் இலக்கிய நிகழ்ச்சி நடாத்தி நேயர்கள், கவிஞர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். அந் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதைகளிலிருந்து
500 க்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்து “கவிதைச்சரம்”
எனும் நூலாக 1986 இல் வெளியிட்டமை
கவிதையின்பால் இவருக்கிருக்கும் பற்றினைக் காட்டுகிறது.

இவர் கவிதைத் துறையோடு நில்லாது பல்துறை ஆளுமை கொண்ட ஒருவர். 1982 தொடக்கம் 2015 வரை சுமார் ஒன்பது நூற்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் முத்தான மூன்று நூற்களை இவரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவற்றுள் ஒன்றான “வரவுக் கவிதைகள் வளமுற”
எனும் நூலினை முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் இஸட். எல். எம்.
முஹம்மத் அவர்களுக்கும், கவிதைச்சரம் தயாரிப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ்
எம். எம். இர்ஃபான் அவர்களுக்கும், அந் நிகழ்ச்சியில் பங்குபற்றியோர்களுக்கும்,
நேயர்களுக்கும் சமர்ப்பணம் செய்து வைத்தமை இவரது நன்றியுணர்வுக்கு நல்லதொரு சாட்சி.

இந்தியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பற்றிய கைப் பிரதி வெற்றி பெற்றது. இதற்கென சென்னை “ரஹ்மத் அறக்கட்டளை” இந்தியப் பணமாக
ஒரு லட்சம் ரூபாவை பரிசாக வழங்கி இவரைக் கௌரவித்தது.

முஸ்லிம் எழுத்தாளர் கவுன்ஸில் “புலராப் பொழுது” என்ற இவரது நூலுக்கு விருது வழங்கி இருக்கிறது. அமைதியான தன்னடக்கம் நிறைந்த ஒருவராகவே கவிஞர் அல் அஸூமத் அவர்களை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கவிஞர் அல் அஸூமத் அவர்களுக்கு எப்பொழுதோ முஸ்லிம் சேவை இனம் கண்டு களம் கொடுத்து மகிழ்ந்தது. இவரது இடைவிடாத முயற்சி குறித்து பாரம்பரியமும், முஸ்லிம் சேவையோடு இணைந்து பெருமிதம் கொள்கிறது.

அன்றைய பசுமையான வானொலி எழுத்து அனுபவங்கள் பற்றி குறிப்பிடுகையில்:-

1981 ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது மர்ஹூம் அன்பு முஹிதீன் அவர்கள் “கவிக்களம்” என்றொரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
அதில் தான் எனது வானொலி வாழ்வின் முதல் கவிதை ஆரம்பித்தது. என்னை சித்தீக் காரியப்பர் தான் இங்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். இலக்கிய மஞ்சரியை மர்ஹூம் அ. ஸ. அப்துஸ் ஸமது அவர்கள் செய்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அடிக்கடி குரல் கொடுக்கவும் எனது சொந்த ஆக்கங்களை வாசிக்கவுமாக
தொடர்ந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது பணிப்பாளராக இருந்த அப்துல் கபூர் அவர்கள் திடீரென என்னைக் கூப்பிட்டு “உனக்கு ஒரு நிகழ்ச்சி தருகிறேன் செய்கிறாயா”? என்று கேட்டார். நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அது என்னவென்றால் மர்ஹூம் அல்லாமா எம். எம். உவைஸ் அவர்களது கட்டுரைத் தொகுதியில்
10 அல்லது 15 கட்டுரைகள் தொகுத்து அனுப்பியிருந்தார். அதில் ஒவ்வொன்றாக தந்தார்கள். வீட்டுக்கு கொண்டு வந்து வாசித்துப் பார்த்தேன். எனக்கே பிரமிப்பாக இருந்தது. அவரது
மிகத் தரமான தமிழ் நடையில் எழுதப்பட்டிருந்தது. அதை வானொலியில் வாசிப்பதற்கு என்னை பொறுத்தமானவன் என்று என்னை தேர்ந்தெடுத்தமைக்காக வானொலிக்கு முதற்கண் நன்றி செலுத்த வேண்டும்.

இப்படி சில காலம் இருந்த பொழுது அ. ஸ. அப்துஸ் ஸமது அவர்களின் இலக்கிய மஞ்சரி காலகட்டம் நிறைவுற்றதால் என்னை நடத்துமாறு பணித்தார்கள். நான் ஏற்றுக் கொண்டேன். மிக அழகாக இலக்கிய மஞ்சரி சென்று கொண்டிருக்கும் போது திடீரென மூன்று மாதங்களில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலக்கிய மஞ்சரியை இலக்கியம் தெரிந்த நானே நிறுத்துவதா என்ற வேதனை எனக்கிருந்தது. என்றாலும் அவர்கள் ஒரு வார்த்தைசொன்னார்கள் “இளைஞர் இதயம் என்ற புது நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம் அதை நீங்கள் தான் நடத்தப் போகிறீர்கள்” என்று,
“இளைஞர் இதயத்தை இளைஞர்கள் அல்லவா நடத்த வேண்டும் நான் கிழவன் நடத்தலாமா”? என்று ஒரு வினாவைத் தொடுத்தேன். தொடர்ந்து செய்யுங்கள் அதில் இலக்கியமும் இருக்கும் என்று சொன்னார். அதையும் மூன்று மாதங்கள் செய்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டேன்.

இதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பணிப்பாளர் இஸட். எல். எம். முஹம்மத்
அவர்கள் என்னை அழைத்து “கவிதைச்சரம்” என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் கவிஞர்களை ஓரளவு ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த காலகட்டத்தில் கவிஞர்களை ஆற்றுப்படுத்தல் நடக்கக் கூடிய காரியமா? என்றெல்லாம் அவருடன் சம்பாஷித்து விட்டு கடைசியாக ஒத்துக் கொண்டு சொன்னேன் இதில் யாரும் குறுக்கிடக் கூடாது அப்படியானால் மட்டும் தான் இதைச் செய்வேன் என்றேன். இதை அவரும் ஏற்றுக் கொண்ட இஸட். எல். எம்.
முஹம்மத் அவர்கள் 26/10/1990 ல்
ஆரம்பிக்கப்பட்டு 26/10/1994 ஆம் ஆண்டின் முடிவில் இந்த கவிதைச்சரம் நிறைவு பெறும் மட்டும் என்னுடைய இந்த நான்கு ஆண்டு கால இந்த நிகழ்ச்சியில் அவர் தலையிடவில்லை. இந்த கவிதைச்சரம் சிறப்புடைவதற்குக் காரணம் அதை நடத்தியவர்களோ, நடாத்தியவர்களோ அல்ல, வாரந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி அனுப்பியவர்களும் அதைத் தெளிவுர வாசித்தவர்களுமே ஆவார்கள்.

மரபுக் கவிதை வடிவத்திலிருந்து நவீன கவிதை வடிவத்துக்குள் கட்டுக் கடங்காது சென்று கொண்டிருக்கின்றது இது பற்றிய ஆலோசனைகள் கூறுகையில்:-

எழுத்து வழியில், இலக்கிய வழியில் இப்படிப்பட்ட விசயங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். புதிதாக வரும் எழுத்தோ, ஊடகமாக இருந்தாலும் சிறுகதை, நாவல் எல்லாம் அப்படி வந்தது தான். ஆனால் கவிதையைப் பொறுத்த
வரையில் இது ஒரு புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது ஏனெனில் இப்படிப்பட்ட பல கட்டங்களைத் தாண்டித் தான் மரபுக் கவிதை என்று நமக்கு ஏற்பட்டது. என்ற நடப்பை உண்மையை முழு மனதாக ஏற்றுக் கொள்கிறேன். இப்பொழுது நாம் மீண்டும் இந்த மரபுக் கவிதையை எதுவுமே செய்ய முடியாத நிலைமையில் ஒதுக்கி வைக்க மாத்திரம் தான் முடிந்த நிலைமையில் அதை ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் எங்களுடைய பழைய நிலைக்கு போய் விட்டோமோ என்று தோன்றும்.

பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படும் கவிதைகளை எந்த நடையில் எழுதுகிறோமோ அந்த நடை தான் புதுக் கவிதை ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் புதுக் கவிதையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்பட்ட காலத்தில் எழுந்த பிச்சை மூர்த்தி அவர்களுடைய கவிதைகளை பார்க்கும் போது அவை மரபுக் கவிதைகளின் சாயலோடு தான் எளிமைப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தன. பாரதியாரின் கவிதைகளைப் போல என்று கூட சொல்லலாம்.

ஆனால் இன்றுள்ளவர்கள் வெறும் வசனத்தை எழுதி விட்டு இதை கவிதை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழிக்கு கவிதை சொல்லிக் கொடுக்க எந்த பிற மொழியும் முயல வேண்டியதில்லை. என்ற உறுதியான கொள்கையை நான் கொண்டிருக்கிறேன். என்றாலும் கூட வந்து கொண்டிருக்கும் இந்த நவீன கவிதைகளில் சில புது முயற்சிகளும் நடை பெறுகின்றன. அதை ஊக்குவிப்பதற்காக வேண்டித் தான் கவிதை சரத்திலும் நான் ஈடுபாடு காட்டி இருந்தேன். “மரபுக் கவிதைகள் வளமுற”
என்ற நூலையும் அதற்காகத்தான் எழுதி இருக்கிறேன். இதை ஒதுக்க முடியாது ஆனால் அதை நல்ல முறையில் அமைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். என்பது தான் தமிழைப் பொறுத்தவரையில் எனக்குள்ள ஒரு ஈடுபாடும் ஆசையுமாகும்.

பாரம்பரியம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை ஏற்பட்ட கால இடைவெளி ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு பதில் கூறுகையில்:-

இந்த கால இடைவெளிக்கான
சரியான காரணம் எனக்கே தெரியாது. ஆனால் சில காரணங்களைச் சொல்லலாம். முதலாவது அடிக்கடி எனக்கே நிகழ்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலமாக இன்னும் பல பேர் மறைக்கப்படலாம், அல்லது விடுபடலாம். என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்னைப் போல் பலரும், என்னை விட திறமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களையும் கொண்டு வந்து செய்யலாமே என்று. அடுத்ததாக திடீரென்று கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சன்மானம் நிறுத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இந்த சன்மானம் நிறுத்தப்பட்டது இன்றைய காலகட்டத்தில் எனக்கு இந்த சன்மானம் தேவையில்லை தான். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் ஆரம்ப காலங்களில் 1982, 83 களில் என்னுடைய உண்மையான அனுபவம் என்னவென்றால் சில வேளைகளில் நான் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்து 100/= ரூபாய் வாங்கிக் கொடுத்து விட்டு இதை வைத்து சமாளியுங்கள் இன்றைக்கு எனக்கு
SLBC பணம் கிடைக்கும் அதைக் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று வந்திருக்கிறேன்.

இப்படி எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னெல்லாம் போக்குவரத்து வசதி செய்து கொண்டிருக்கப்பட்டது. மேலதிகமாக சன்மானமும் வழங்கப்பட்டது. இதை ஏன் நிறுத்துகிறீர்கள் என்று வினா தொடுதிருந்த காலகட்டம் ஆனால் அதற்கான சரியான மறுமொழியும் கொடுக்கவில்லை. இது வரை சன்மானம் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இருந்தாலும் கூட இந்த பாரம்பரியம் என்ற இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு உழைப்பாளியையும் அதாவது தமிழுக்காக முஸ்லிம் சேவைக்காக பாடுபட்ட ஒவ்வொருவரையும் அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்? என்பது எனது சொந்த அனுபவம். எனக்கு தெரியும் அவர்களை இப்பொழுது காலம் கடத்தல் இல்லாமல் வெளிக் கொணர்வது ஒரு பாரிய ஒரு நிகழ்ச்சி இதற்காக எனது சகோதரர் எம். எஸ். எம். ஜின்னாஹ் அவர்களும், எஸ். எம். ஹனீபா அவர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்படுவது என்னால் தவிர்க்க முடியவில்லை. என்னுடைய பழைய கொள்கைகளை விட்டு இங்கு வந்து விட்டேன்.

சுய ஆக்கங்கள் தவிர்த்து மொழி பெயர்ப்புகளில் இறங்கியதற்குக் காரணம் கூறுகையில்:-

சுய ஆக்கங்களை விட பிற மொழிகளில் சமூகத்திற்குத் தேவையான நான் எழுத நினைக்கும் சுய ஆக்கங்களை விட சமூகத்திற்குச் செல்லக் கூடிய மிக நன்மையான ஆக்கங்கள் இருப்பதை நான் காணும் போது என்னுடைய முயற்சியை அதில் செலவளிக்கிறேன்.
மலையாளத்தில் ஒரு சிறுகதைத் தொகுதியை நான் வாசித்த போது அப்படியொன்று தமிழில் இல்லையே என்ற ஆதங்கத்தால் அதனை நான் மொழி பெயர்த்தேன். அது அண்மையில் வெளியிடப்பட்டது.

பிலால் என்ற தொகுதியை ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூலை வாசித்த போது இது தமிழுக்கு வேண்டும் என அதையும் மொழி பெயர்த்தேன். இன்னொன்று இஸ்லாமிய வரலாறு முற்று முழுக்க நம்மிடம் தமிழில் இல்லை. அதை நான் ஆங்கிலத்தில் கண்ட போது தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இது போல மேலும் சில நூல்களை மொழி பெயர்த்திருக்கிறேன். சுமார் 5, அல்லது 6 நூல்கள் என்று நினைக்கிறேன் தமிழ் நாட்டில் அச்சில் இருக்கின்றன. அது தான் நான் தொடர்ந்து எழுதாமைக்குக் காரணமாக உங்களுக்கு தெரிகிறது என்று நினைக்கிறேன். என்று கூறி முடித்துக் கொண்டார்.

– – – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top