Muslim History

பாரம்பரியம்

பாரம்பரியம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் (07/06/2022) முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சியில் மூத்த பாடகர், முதுபெரும் பாடகர், இசைத் துறையின் வரலாற்று நாயகர் கலாசூரி மொஹிதீன் பேக் அவர்கள் பற்றி நினைவு கூறப்பட்டது.

அவர் பற்றிய நினைவுகளை அவருடைய மகன் இஸாக் பேக், மகள் மொயீனா பேகம் ஆகியோர் நேயர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்களை நேர்காணல் செய்தார் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம்.
ஜின்னாஹ் அவர்கள்.

இஸாக் பேக் அவர்கள் தனது குடும்பம் பற்றி கூறுகையில்:-

எனது தந்தையை எல்லோருக்கும்
தெரியும். தாயார் ஸகீனா பீ பேக். மூத்த சகோதரர் அல்ஹாஜ் உஸ்மான் பேக், சகோதரி ராபியா பேக், ஹைதர் பேக், சலீமா பேகம், முபாரக் பேக், இஸாக் பேக்,
இல்யாஸ் பேக், மொயீனா பேகம் என எட்டு பேர்.

மொயீனா பேகம் தனது தந்தை வழியில் பாடல் பாடிக் கொண்டிருப்பவர்கள் பற்றி குறிப்பிடுகையில்:-

பாடல் துறைக்கு நாங்கள் வந்தது ஒரு வரலாற்று கதை. 1991 ஆம் ஆண்டு எங்கள் தகப்பனாரின் பிரிவை பின்னோக்கிய நாங்கள் இல்யாஸ் பேக், இஸாக் பேக் நானாமார்களோடு இந்த துறைக்கு ஒரு தற்காலிகமாக அழைப்பாக அமைந்தது. நாங்கள் இந்தத் துறைக்கு காலெடுத்து வைப்போமென்று
நினைத்துக் கூட பார்க்கவில்லை.

தனது தந்தைக்கு இஸ்லாமிய கீதம் பாட ஆர்வம் ஏற்பட்டது பற்றி இஸாக் பேக் கூறுகையில்:-

எனது தந்தை தனது “மியுஸிக் லைஃப் ஐ
தொடங்கும் போது நாங்கள் பிறந்திருக்கவும் மாட்டோம். அந்த காலத்தில் முதன் முதலாக இலங்கைக்கு வந்த ஒரு பாடகராக “ஸெலெக்ட்” பண்ணி வைத்திருந்தார்கள். இந்த சமயத்தில் அவர் இந்தியா சென்ற நேரம் அங்கு இந்தியன் “ரேடியோ ஸ்டேஷனில்”
வரச் சொல்லி “இண்டவிவ்” பண்ணி இஸ்லாமிய கீதம் பாடுகிறீர்களா? என்று
கேட்டிருக்கிறார்கள். சரி பாடுகிறேன் என்றாராம். புலவர் ஆப்தீன் அவர்கள் எழுதிய பாட்டு. இப்படித்தான் இந்தியாவில் இஸ்லாமிய கீதம் தொடங்கியது.

அங்கு இஸ்லாமிய கீதம் பாடி விட்டு
இலங்கை வந்தார். இங்கு “ரேடியோ சிலோனில்” முஸ்லிம் சேவையில் அழைப்பு வந்தது. இஸட். எல். எம். முஹம்மத் ஹாஜியார், எம். எச். குத்தூஸ்,
பீர் முஹம்மத் எல்லோருமே மாஸ்டர் என்று தான் எங்கள் வாப்பாவை அழைப்பார்கள். மாஸ்டர் இஸ்லாமிய கீதம் பாடுவோமா என்று கேட்டார்கள்.
இவ்விதமாகவே இங்கு இஸ்லாமிய கீத
வாழ்க்கை தொடர்ந்தது.

தனது தந்தைக்கும் முஸ்லிம் சேவைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி அவரது மகள்
மொயீனா பேகம் கூறுகையில்:-

“S. L. B. C Program” க்கு ரெடியாவதை நானும் பார்த்திருக்கிறேன். நாலைந்து நாட்களுக்கு முன்பே எனது நானாமார்கள் போய் பாடலாசிரியரிடம்
போய் பாடலை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஐந்தாறு நாட்களுக்கு முன்பே வீட்டில் அமைதியான சூழலில் “Practice” பண்ணுவார். காலையிலேயே
தொழுகைகளை முடித்துக் கொண்டு
S. L. B. C யை தனது பெரிய வீடு என்று தான் சொல்வார். அங்கே புறப்பட்டு போய் விடுவார். மூன்று மணியளவில்
இஸ்லாமிய கீதம் பாடி விட்டு வந்து விடுவார். இந்த நேரத்தில் ரேடியோவில் போகும் நாமெல்லோரும் கேட்போம் என்று ரேடியோவை ஆயத்தமாக வைத்திருப்பார். நானும் சிறுமியாக இருந்த பருவத்தில் வாப்பா பாடிய பாடல்களை கேட்டிருக்கிறேன்.

மேலும் மொயீனா பேகம் கூறுகையில்:-
தமிழகத்து பாடகர்கர்களான சரளா,
எஸ். ஜானகி, கே. ராணி ஆகியோருடன் வாப்பா இணைந்து பாடி இருக்கிறார்.

தனது தந்தை பாடிய இஸ்லாமிய கீதமும்
அவருக்கு யார் யார் பாடல் எழுதிக் கொடுத்தார்கள் என்பது பற்றி இஸாக் பேக் கூறுகையில்:-

இஸ்லாமிய கீதங்கள் டீ. ஆப்தீன் அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.
இப்படி அதிகமானோர் எழுதிக் கொடுத்துள்ளார்கள். பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. “மியுஸிக்” என்று சொல்லும் போது சாலி மாஸ்டர், டீ. எப்F.
லத்தீப், ஏ. ஜே. கரீம், நிஸாம் கரீம், ஸவாஹிர் மாஸ்டர், சோமபால, நயீம் மாஸ்டர், முத்துசாமி போன்றோர். அதே போன்று டோனி ஹஸன், சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் வாப்பாவுடன் “கோரஸ்” பாடி இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து ஜானகி அம்மா
இலங்கை வந்த போது எங்கள் தந்தையுடன் பாடிய பாடல் நினைவிருக்கிறதா? என்று கேட்டேன்.
நன்றாக நினைவிருக்கிறது. அவர் பெரிய ஸாரே. எங்களுக்கெல்லாம் கை கொடுத்து வழி காட்டியது அவர் தான்
என்று மிகவும் மனவருத்தத்துடன் பேசினார். அவரது மரணம் பற்றிய விபரமும் கேட்டார். அதே போல் அண்மையில் சரளா சொல்லி இருந்தார். நான் இலங்கையில் ஒரு பாடகரோடு பாடி இருக்கிறேன். அது மொஹிதீன் பேக் என்று.

கௌஸ் மாஸ்டர் பற்றி இஸாக் பேக் கூறுகையில்:-

இலங்கைக்கு எங்கள் வாப்பா வந்ததும் சிங்கள பாடல் பாடியது கௌஸ் மாஸ்டருடைய இசையமைப்பில் தான். அவரும் ஒரு இந்தியர் தான். அவர் முன்பே இங்கு வந்து “Settle” ஆகி இருந்தார். எனது தந்தையும் இங்கு “Settle” ஆனதும் பாட்டொன்று செய்வோமா? என்று யூ. டீD. பெரேரா மாஸ்டர் கேட்ட போது அந்த நேரம் கௌஸ் மாஸ்டர் தான் “மியுஸிக்” பண்ணினார். அதே போல் இஸ்லாமிய கீதமும் அந்தந்த காலத்திற்கு கௌஸ் மாஸ்டர் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

தன் தந்தையாரோடு இசை மேடைக்குப்
போன போது தான் கண்ட அனுபவங்கள் பற்றி இஸாக் பேக் கூறுகையில்:-

நான் சுமார் 15 வருடங்களாக வாப்பாவோடு போயிருக்கிறேன். அந்த இடத்திற்கு போனால் அந்த மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பு, மரியாதை என்பவற்றை நான் கண்ட காட்சி அவைகளை என் கண்ணீரால் தான் துடைக்க வேண்டும். யாராக இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் வாப்பாவைக் கண்டால் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள்.

தொடர்ந்து இஸாக் பேக் கூறுகையில்:-
இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.
சந்தோஷமான நாள். இந்த பாரம்பரியம் நிகழ்ச்சிக்கு எங்களுக்கும் அழைப்பு கொடுத்ததற்கு. நாங்களும் கலந்து இன்று சேர்ந்திருக்கிறோம். வானொலியில் பாரம்பரியம் நிகழ்ச்சியை கேட்கும் போதெல்லாம் நாங்களும் எப்பொழுது எங்கள்
வாப்பாவைப் பற்றி பேசுவோம்? என நாளுக்கு நாள் ஆசைப்பட்டோம். அந்த நாள் இன்று பேசுகிறோம். மௌத்துக்கு முன்னால் இப்படி ஒரு “Program” கிடைத்தது. அல்லாஹ்வுக்கு நன்றிக் கடனாக இருக்கிறேன்.

மொயீனா பேகம் தனது தந்தையைப் பற்றி மேலும் கூறுகையில்:-

எங்கள் தந்தைக்கு நாங்கள் பிள்ளைகளாக பிறந்தது அல்லாஹ் எங்களுக்கு தந்த பாக்கியம் என்று நினைக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்,
அவர் எங்களைப் பிரிந்து சுமார் 32 வருடங்களாகி விட்டன. அவரது நினைவுகள் எப்போதுமே மாறாது. எங்களை விட்டு போகவே போகாது. வாப்பா நிகழ்ச்சிக்கு போகும் போது அவரது உடுப்பு துணிமணிகளை தயார்படுத்திக் கொடுக்கும் மகளாக அமைந்தது அல்லாஹ் எனக்கு செய்த பாக்கியம்.

அவரைப் பற்றி இன்று பேசுவதற்கு
நேரம் காலம் போதாது. அவரது வரலாற்றை பேசிக் கொண்டே போகலாம். அவர் இலங்கைக்கு என்னென்ன மாதிரி சேவை செய்தார்?
யார் யாரெல்லாம் அவருக்கு துணையாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஜின்னாஹ் நானா
மிகவும் கஷ்டப்பட்டு அமைப்பதற்கு உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

மேலும் இஸாக் பேக் கூறுகையில்:-
பாக்கிஸ்தான் பிரதமர் ஷியாவுல் ஹக்
1988 அல்லது 1989 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். நம் நாட்டு பிரதமர்
மறைந்த ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் வாப்பாவை கூப்பிட்டு ஒரு “நாத்” படிக்க வேண்டும். என்று வேண்டிக் கொண்டார்.
“நாத்” என்பது “மியுஸிக்” அல்லாத ஒரு வகை “பைத்” வாப்பாவும் சரி என்று சொன்னார். ஆனால் வாப்பாவுக்கு தெரியாது யார் வருகிறார் என்று. வாப்பாவும் பாட்டை எடுத்துக் கொண்டு போனார். அப்போது தான் வாப்பாவுக்கு
தெரியும் பாக்கிஸ்தான் பிரதமர் ஷியாவுல் ஹக் வருகிறார் என்று.

வாப்பாவுக்கு காய்ச்சல் மாதிரி வந்து விட்டது. ஒரு பெரிய பிரதமர் முன்னால் நின்று பாட வேண்டும் அதுவும் உருதுப் பாடல் பிழை இல்லாமல் பாட வேண்டுமே என்ற பயம் வேறு. சலாம் சொல்லி, பிஸ்மில்லா கூறி பாடலை படித்தார். பிரதமர் வீட்டுக்குள் வராமல் வெளியே இருந்து கொண்டு எங்கள் வாப்பாவை அழைத்தார். “மொஹியத்தீன் பேக், மொஹியத்தீன் பேக்” என்று வாப்பாவை அழைத்தார். வாப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. வாப்பாவை கட்டிப் பிடித்து நமது பிரதமர் பிரேமதாச அவர்களிடம் இவரையும், இவரது குடும்பத்தினரையும் எங்கள் நாட்டுக்கு கூட்டிப் போகிறேன் என்று கேட்ட போது எங்கள் பிரதமர் இல்லல்ல இவர் இந்தியாவிலிருந்து எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார்.

எங்கள் வாப்பா சொன்னார் இந்த நாட்டில் எங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது இந்த நாட்டை விட்டு எங்குமே நான் போக மாட்டேன் இதுவே எனது நாடு, எனது நாடு என்று இலங்கையைப் பற்றி பெருமையாக பேசுவதோடு இதை விட்டுப் போக மாட்டேன் என்றே கூறுவார். இந்த மக்களும் நன்றிக் கடன் காட்டி இருக்கிறார்கள். அவரது மரணத்தின் போது பௌத்த மக்களும் அவரது ஜனாஸாவை தூக்கிக் கொண்டு போனதை நான் கண்டேன். அந்த காட்சி இன்னும் என் கண் முன்னே தெரிகிறது.

அதே போல் முஹம்மது ராபி அதிகமாக பேசி இருக்கிறார். 30 வருட
கூட்டாளிகள். இந்தியாவில் ஒரே “ஸ்டூடியோ” வில் அக்கம் பக்கமாக பாடலை “Record” பண்ணி விட்டு நன்றாக கதைப்பார்கள். இலங்கைக்கு வந்த நேரம் என்னுடைய “தோஸ்த்” சந்தோஷமாக இருக்கிறாரா? என்று கேட்ட போது உங்களுக்கு “தோஸ்த்” இலங்கையில் இருக்கிறாரா அது யார் என்று கேட்டதற்கு மொஹிதீன் பேக் என்று சொன்னாராம்.

எமது முஸ்லிம் சேவைக்கு அவர் இஸ்லாமிய கீதங்கள் பாடுகின்ற வேளையில் ஒலிப்பதிவு செய்கின்ற போது தயாரிப்பாளர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள் காரணம் அழுகையும் கண்ணீருமாகத்தான் உங்களது தந்தையார் பாடுவாராம். இதனை முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆயிஷா ஜுனைதீனும், முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் மர்ஹூம் இஸட். எல். எம். முஹம்மத் ஹாஜியாரும் பல தடவைகள் என்னிடம் கூறியதை இங்கு நான் பதிவு செய்கிறேன். என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சகோதரர் ஜின்னாஹ் அவர்கள் பழைய சம்பவத்தை நினைவு படுத்தி அவர் பாடிய பாடலொன்றையும் ஒலிபரப்பி
நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

வெளி வராத நமது மூத்த மறைந்த ஆளுமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களது அடையாளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி முத்திரை பதித்து நிற்கிறது. அதற்காக பாடுபடும் சரித்திர நாயகன் சகோதரர் கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னாஹ்
அவர்களுக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும், முஸ்லிம் சேவை பணிப்பாளர் சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

– – – – – – – – – – – – – – – – – – –

மேலும் வரலாற்று நிகழ்வுகளைப் பெற்றுக்கொள்ள, எமது Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top