News

திருகோணமலை – கொட்டியாரக்குடா பகுதியில் வரலாற்றுப் புதையலொன்று இருக்கிறது.

திருகோணமலை - கொட்டியாரக்குடா பகுதியில் வரலாற்றுப் புதையலொன்று இருக்கிறது.

வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர், நூல் திறனாய்வாளர், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர், பன்முக செயற்பாட்டாளர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் எழுதிய . . . திருகோணமலை – கொட்டியாரக்குடா பகுதியில் வரலாற்றுப் புதையலொன்று இருக்கிறது.

திருகோணமலைத் துறைமுகமும் கொட்டியாரக் குடாவும், இலங்கையின் பொது வரலாற்றிலும் – முஸ்லிம்களின் குறிப்பான வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

பொலன்னறுவை இராச்சியத்தின் துறைமுக நகராகவும் (Port City) இரண்டாவது பெரிய நகராகவும் (2nd city) இதுவே விளங்கியது.

கப்பல் போக்குவரத்து ஊடாக (Maritime trade route), சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் அதிகம் நிகழ்ந்த காலத்தில், இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இன்றும் அந்த முக்கியத்துவத்திற்குக் குறைவில்லை. உலகின் மிக முக்கியமான இயற்கைத் துறைமுகமாகவும் (Natural Harbour) இது விளங்குகிறது. இன்றைய பூகோள அரசியலிலும் (Geopolitics) இது முக்கியத்துவம் பெற்றே காணப்படுகிறது.

இலங்கை சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், பொலன்னறுவையை ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயரிட்டு அழைத்தனர். தங்களது ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதியை ‘மும்முடிச் சோழ மண்டலம்’ என்று அடையாளப்படுத்தினர். இதற்குள் கிழக்கு மாகாணமும் அடங்கியிருந்தது.

சோழப் பேரரசு கடற்படையில் சிறந்து விளங்கியது என்பதை எல்லோரும் நன்கறிவர்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டியே, சோழர்களின் கடலாதிக்கம் நிலைபெற்றிருந்தது. “கங்கை கொண்ட- கடாரம் வென்ற” சோழர்கள், மலேசியாவின் இன்றைய கடா மாநிலத்தையும் (கடாரம்), அப்போது தமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தனர்.

மலேசியா வரை தமது ஆதிக்கத்தை நிறுவ முடிந்த சோழர்கள், தமிழகத்தின் கிழக்குக் கடற்பரப்பிலிருந்து, அதே கடற்படைப் பலத்தோடு இலங்கையின் கிழக்குக் கடலோரம் நகர்வது இலகுவானது.

இதன் மூலம் இலங்கையின் கிழக்கிலும் தென்கிழக்கிலும் அவர்கள் செல்வாக்குச் செலுத்தினர். வரலாற்று நோக்கில், இங்குதான் திருகோணமலைத் துறைமுகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சோழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவு இருந்ததாகவே தெரிகிறது. இலங்கையில் சோழர் ஆட்சி இடம்பெற்ற காலத்தை, முஸ்லிம் வரலாற்று நோக்கில் இன்னும் விரிவாக ஆராய வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது சோழமண்டலக் கரையோர முஸ்லிம்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். எனது வரலாற்றுத் தேடலில், அவரையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில், திருகோணமலைத் துறைமுகம் பல வகை அரசியல், வணிக மற்றும் பண்பாட்டுச் சூழல்களை எதிர்கொண்டு வந்துள்ளது. கண்டி ராச்சியத்தின் கீழ் அது இருந்த காலமும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

திருமலைத் துறைமுகத்தையும் கொட்டியாரக் குடாவையும் சூழ, பெருமளவு முஸ்லிம் குடியிருப்புகள் உள்ளன. மூதூர் என்ற மூத்த ஊரும் கிண்ணியா போன்ற பெரிய ஊர்களும் குச்சவெளி, நிலாவெளி, இறக்கக் கண்டி, புல்மோட்டை போன்ற ஊர்களும் அதிகளவு முஸ்லிம்களைக் கொண்டுள்ளன. இவற்றின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் பல புதிய செய்திகள் கிடைக்கும்.

துறைமுகப் பிரதேசம் என்பதால், இங்கு பல நாட்டவரும் வந்து போவது இயல்பானது. திருமலை/ கொட்டியாரக் குடா முஸ்லிம்களிடையே, இந்தப் பன்னாட்டுத் தோற்றப் பல்வகைமையை அவதானிக்கலாம்.
ஜாவா, அரேபியா, ஆபிரிக்கா… என்று அவை பன்முகம் காட்டும். எனக்குத் தெரிந்த பலரே இவ்வாறான உருவ-உடலமைப்பில் உள்ளனர்.

திருமலையில் ஜான் மாஸ்டரின் குடும்பம், வீட்டு மொழியாக ஆப்கானிய மொழியான பஷ்து (Pashto) மொழியைப் பேசுவதை, அவர்களது குடும்ப அங்கத்தவர் ஒருவரோடு பேசும்போது எதேச்சையாக அறிந்து கொண்டேன். சிலவேளை நம்நாட்டில் பஷ்து பேசும் கடைசிக் குடும்பமாகக் கூட இது இருக்கலாம்.

இது பஷ்தூன் மக்களின் மொழி. ஆப்கானிஸ்தானில் அதிகளவிலும் ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது.

இப்படி திருமலை/ கொட்டியாரக்குடா பகுதியில் வரலாற்றுப் புதையலொன்று இருக்கிறது.
அதைத் தேடி அறிய ஒரு வரலாற்று ஆய்வுக் குழு தேவை. நிதி ஆதாரமும் தேவை.

✍🏻 சிராஜ் மஷ்ஹூர் 08.04.2023

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top