Article

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள். முஸ்லிம்கள் அல்லர். இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள். முஸ்லிம்கள் அல்லர். இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள். முஸ்லிம்கள் அல்லர். இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை.

அஷ்ஷெய்க் பளீல். (நளீமி)

(அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பு)

அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று பொறுப்புக்கள் பற்றி கூறுகிறான். அவை:-

1. கிலாபத் – Viceregency

(அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை உலகில் நடைமுறைப்படுத்தும் பிரதிநிதியாக செயல்படுவது)

“(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியதை நினைவுபடுத்துங்கள்”,(அல்குர் ஆன் 2:30) (மேலும் பார்க்க:6:165,35:39)

2. இபாதத் – Worshiping

(அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபாடுவதுடன் வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படுவது)

“ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை ‘இபாதத்’ செய்வதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” (51:56), “எனக்கு மட்டுமே ‘இபாதத்’ செய்யுங்கள்”(29:56)

3. இமாரத் – Promoting the Growth and Prosperity on the Earth (பூமியை வளப்படுத்தி ஆக்க முயற்சிகளிலும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுவது)

“அவனே உங்களை பூமியிலிருந்து உண்டாக்கி, அதனை வளப்படுத்தும் படியும் உங்களிடம் வேண்டிக் கொண்டான்.” (11:61)

மேலும், இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையான இலக்குகள் ஐந்தாகும். அவற்றைப் பேணிப் பாதுகாப்பது தான் இஸ்லாத்தின் குறிக்கோள் என்று குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் மூலமாக தெரிய வருகிறது. அவற்றை இமாம்கள் ளரூரிய்யாத் (Necessities -மிக அத்தியாவசியமாகப் பேணிப் பாதுக்காப்பட வேண்டியவை) என்பர்.

1. தீன் (மார்க்கம் – Religion) ஐ பாதுகாப்பது

2. நஃப்ஸ் (உயிர் – Life or Physical Safety) ஐ பாதுகாப்பது

3. மால் (சொத்துக்கள் – Property) ஐ பாதுகாப்பது

4. அக்ல் (பகுத்தறிவு – Intellect or Mind) ஐ பாதுகாப்பது

5. நஸ்ல் (பரம்பரை – Ancestry and Lineage) ஐ பாதுகாப்பது

இமாம்களான கஸ்ஸாலி(ரஹ்)-ஹி.505, அல்இப்னு அப்துஸ் ஸலாம்(ரஹ்)-ஹி 660, இமாம் ஷாதிபீ(ரஹ்)-ஹி-790 போன்றோர் இவை பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

எனவே, இஸ்லாம் உலகத்துக்கு ஓர் அருளாகும். அது மனித நலன்களை வளர்ப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதாகும்.மாறாக, அது பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. ஒருபடி மேலே போய்க் கூறுவதாயின் ‘அவற்றை அது எதிர்க்கிறது’.

யுத்தங்களுக்கு யார் காரணம்?

மனித உயிர்களுக்கும் உலக வளங்களுக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய முதலாம், இரண்டாம் உலகப் போர்களை மேற்குலக நாடுகள் தான் செய்தன. அந்த இரு யுத்தங்களிலும் ஏறத்தாள 10 கோடிப் பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவற்றுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. இந்தியாவில் காலனித்துவவாதிகள் 40 வருடங்களில் 100 மில்லியன் பேரைக் கொன்றார்கள். அல்ஜீரியாவில் காலனித்துவவாதிகளது ஆக்கிரமிப்பால் 2 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். ஆப்கான் போரில் ஏறத்தாள 2.2 மில்லியன் பேரும், ஈராக் யுத்தத்தில் 1 மில்லியன் பேரும் பயங்கரமான ஆயுதங்களால் படுமோசமாகக் கொல்லப்பட்டார்கள். இது போன்ற இன்னும் பல தகவல்களைப் விகிபீடியாவில் காணலாம்.

தற்போது காஸாவில் தொடரும் அவலத்தில் இதுவரை பச்சிளம் குழந்தைகள் 8,000 பேர் 6,500 பெண்கள் உள்ளிட்ட 26,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300 க்கும் அதிகமான பள்ளிவாயல்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இவை தவிரவுள்ள சேதங்கள் ஏராளம். 2.3 மில்லியன் சனத்தொகை கொண்ட காஸாவில் 90% மானவர்கள் அன்றாட உணவுக்காகத் திண்டாடுகிறார்கள்.

இது இப்படியிருக்க, காஸா பிரதேசத்தில் யுத்த நிறுத்தம் தேவை என்ற கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பொழுது அதற்கு சார்பாக நமது நாடு இலங்கை வாக்களித்திருப்பதை முஸ்லிம் சமூகம் என்ற வகையில் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நினைவு கூர வேண்டும்.

அதிகார வெறி, மனித இரத்தம் குடிக்கும் ஆசை, மமதை, ஆணவம், சொத்துக்களை சூறையாடும் ஆசை இவை தான் உலகில் யுத்தங்களுக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் காரணம். இந்த யுத்தங்களைத் தூண்டி, அவற்றைச் செய்தவர்கள் தான் பயங்கரவாதிகள்; மனித சமூகத்தின் துரோகிகள்; மனித உருவில் நடமாடுவோர். ஆனால், இவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நோக்கி விரல் நீட்டுகிறார்கள். இஸ்லாம் பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் முஸ்லிம்கள் தான் வன்முறையாளர்கள் என்றும் கூறுகின்றனர்.

நவீன உலகில் அராஜகம் புரியும் ஆட்சியாளர்கள் பிர்அவுனைப் போன்றவர்கள்.

“நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.”

அல்லாஹ்வின் மீது பயமில்லாத, இதயத்தில் ஈரமில்லாத ஆட்சியாளர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அல்லாஹ் இத்தகைய ஆட்சியாளர்கள் பற்றி

“அரசர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதில் அவர்கள் விஷமத்தனம் செய்வார்கள்.அதில் வசிக்கும் கண்ணியமானவர்களை இழிவானவர்களாக மாற்றுவார்கள்”(27:24) என்று கூறுகிறான்.

நயவஞ்சகனின் பண்பு பற்றி அல்லாஹ்

“அவன் ஆட்சிப் பொறுப்பை எடுத்தால் பூமியில் விஷமம் செய்வதற்காகவும், பயிர்களை, உயிரினங்களை அழிப்பதற்காகவும் முயற்சிப்பான். அல்லாஹ் விஷமம் செய்வதை விரும்பமாட்டான்”(2:205)

என்று அல்லாஹ்வின் விசுவாசமோ பயமோ இல்லாத ஆட்சியாளர்கள் பற்றி குறிப்பிடுகிறான்.

போதை வஸ்துக்களையும் அழிவு தரும் ஆயுதங்களையும் உற்பத்திசெய்து விற்பனை செய்வோர் உலகில் இருக்கிறார்கள். ஆபாசப்படங்களை தயாரிப்போர் இருக்கிறார்கள். இவர்கள் மிகப்பெரும் சுயநலமிகள், விஷமிகள், மனித இனத்தின் விரோதிகள். இவர்கள் தான் பயங்கரவாதிகள்.இவர்களது இந்த விஷமத்தனங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அருளின் மார்க்கம் இஸ்லாம்

ஆனால், முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் அல்லாஹ் அருளாளனாகவும். அன்புள்ளவனாகவும் இருக்கிறான். அல்லாஹ் தனது தூதரைப் பார்த்து,

‘உம்மை நாம் உலகத்தாருக்கான ஓர் அருட்கொடையாக மட்டுமே அனுப்பியிருக்கிறோம்’(21:107) என்றும் ‘அவர் உங்கள் மீது மிகுந்த அக்கறைகொண்டவராக இருக்கிறார்’(9:128) என்றும் கூறுகிறான்.

எனவே, இஸ்லாம் என்றாலே அது அருள் தான். அங்கு அக்கிரமம், அழிவு வேலை, அடாவடித்தனம் என்பன இல்லை; இருக்காது. அங்கு மனித இனத்தின் மீதான உளப்பூர்வமான அன்பும் உலகத்தை வளப்படுத்த வேண்டும் என்ற ஆழமான தேட்டமும் மாத்திரமே இருக்கும்.

ஈமான் 60 அல்லது 70 சொச்சம் கிளைகளைக் கொண்டது என்றும் அதில் தாழ்ந்த பகுதி பாதையில் இருக்கும் பிறருக்கு இடையூறு தரும் அம்சங்களை அகற்றுவதாகும் என்றும் நபி (ஸல்) குறிப்பிட்டார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் -35)

“நீ பாதையில் இருக்கும் மக்களுக்கு இடையூறு தருபவற்றை அகற்றுவது தர்மம்” என்றும் கூறினார்கள். (புகாரி – 2989, முஸ்லிம் -1009)

“பாதையில் மக்களுக்கு இடையூறாக இருந்த ஒரு மரத்தை வெட்டியமைக்காக சுவர்க்கத்தில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு மனிதனை நான் கண்டேன்” என நபி (ஸல்) குறிப்பிட்டார்கள்.(முஸ்லிம் – 1914)

எனவே, ஒரு முஸ்லிம் தனது வாகனத்தை பாதசாரிகளுக்கும் வாகங்களை செலுத்துவருக்கும் இடையூறாக பாதையோரத்தில் நிறுத்துவது கூட தவறாகும். அது அவனுடைய ஈமானைப் பாதிக்கும். அந்த வகையில், வார்த்தையளவில், எண்ணத்தளவில், செயலளவில் கூட ஒரு முஸ்லிம் பிறருக்கு இடையூறாக அமைய மாட்டான்.

ஜீவகருண்யம்

இஸ்லாம் மனித உயிர்களை புனிதமாக மதிக்கிறது. அவற்றைப் பாதுகாக்க உச்சகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதற்கும் அப்பால் ஒருபடி சென்று மிருகங்களுடன் கூட ஜீவகாருண்யத்தைப் பேணுகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

“ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை”. (புகாரி : 3482), முஸ்லிம்:2242)

தாகமாக இருந்த ஒரு நாய்க்கு நீர் புகட்டிய ஒருவருக்கு அல்லாஹ் நன்றி தெரிவித்து, அவரது பாவங்களை மன்னித்து, அவரைப் புனிதராக மாற்றியதாக நபியவர்கள் கூறிய போது அதனைக் கேட்ட நபித்தோழர்கள் ‘மிருகங்களுக்கு உதவிசெய்தாலும் எமக்கு கூலி உண்டா’? என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது நபியவர்கள், “ஈரளிப்பான ஈரலைக் கொண்ட எந்தவொரு ஜீவராசிக்கு நீங்கள் உதவி செய்தாலும் (அவற்றை கவனித்தாலும் அல்லாஹ்விடத்தில்) அதற்காக கூலி உள்ளது” (புகாரி:2363) என்று பதிலளித்தார்கள்.

கடும் தாகத்தில் இருந்த ஒரு நாய்க்கு துர்நடத்தை கொண்ட ஒரு பெண் நீர் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றினாள் என்றும் அவளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் இன்னும் ஒரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது (புகாரி -3467)

ஒரு நபி ஒரு பிரதேசத்தில் ஓர் எறும்பு தன்னைக் கடித்ததற்காக அப்பகுதியில் இருந்த அனைத்து எறும்புகளையும் சுட்டுப் பொசுக்கினார். அவரை விழித்து அல்லாஹ் :- ‘ஓர் எறும்பு உம்மை கடித்தமைக்காக அல்லாஹ்வை துதிக்கும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை அழித்து விட்டீரே’ என்று கண்டித்தான் என ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள ஒரு ஹதீஸில்(புகாரி -3019) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பறவையைக் கட்டிவைத்து, கற்களால் எறிந்து விளையாடிய இளைஞர்களைக் கண்ட ‘இப்னு உமர்(ரழி) அவர்கள் ‘இவ்வாறான கருமங்களில் ஈடுபடுபவர்களை நபி(ஸல்) சபித்திருக்கிறார்கள்’ என்று கூறியதுடன் “யார் உயிருள்ள எந்தவொன்றையாவது இலக்குவைத்து தாக்குகிறாரோ அவரை அல்லாஹ்வின் தூதர் சபித்தித்திருக்கிறார்கள்’ (முஸ்லிம்-1958) என்றும், “மிருகங்களை சித்திரவதை செய்பவரை அவர்கள் சபித்திருக்கிறார்கள்” என்றும் கூறினார்கள்.(புகாரி- 5515)

பூனை, நாய், எறும்பு, பறவை போன்ற உயிரினங்களுக்கு இஸ்லாத்தில் இவ்வளவு கண்ணியம் வழங்கப்பட்டிருப்பதாயின் மனிதனுக்கு எவ்வளவு மதிப்பிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மனித உயிரை அநியாயமாகப் போக்குவது முழு மனித சமுதாயத்தையும் அழித்தமைக்கு சமனான குற்றமாகவே இஸ்லாம் கருதுகிறது. குர்ஆனில் அல்லாஹ்,

“நிச்சயமாக எவனொருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (5:32) எனக் கூறுகிறான்.

அடிப்படையில் இஸ்லாம் யுத்தத்தை – ஆயுதப்போரை விரும்பவில்லை.

“எதிரியை (யுத்தகளத்தில்) சந்திப்பதை நீங்கள் விரும்ப வேண்டாம். நிம்மதியான சூழலை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள்” (புகாரி -3024) என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

யுத்தமும் தர்மமும்

அப்படியாயின் இஸ்லாத்தில் பத்ர், உஹத் போன்ற யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன அல்லவா? என்று சிலர் கேட்கலாம். ஆம், முஸ்லிம்கள் யுத்த சூழ்நிலைக்கு எதிரிகளால் தள்ளப்படுகின்ற பொழுது, நிர்ப்பந்தமான நிலையில், தற்காப்புக்காக, அடக்கு முறையை எதிர்ப்பதற்காக இஸ்லாம் யுத்தத்தை அனுமதித்திருக்கிறது.

ஆனால், யுத்தத்தின் பொழுது கடுமையான கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் இஸ்லாமிய யுத்த தர்மங்களையும் பேணும்படி அது கடுமையாக வலியுறுத்தியிருக்கிறது.

அபூபக்கர் (ரலி)அவர்கள் இப்போது பாலஸ்தீன் அமைந்திருக்கின்ற ஷாம் பிரதேசத்திற்கு உஸாமா(ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை அனுப்பிய பொழுது செய்த நீண்ட உபதேசத்தில் ஒருபகுதியில் பின்வருமாறு ஆணித்தரமாக கட்டளையிட்டார்கள்:

‘சிறுவர்களை, பெண்களை, வயோதிபர்களை கொலை செய்ய வேண்டாம். மரங்களை வெட்ட வேண்டாம். உணவுக்காக அன்றி ஆடுகளை ஒட்டகங்களை நீங்கள் கொலை செய்ய வேண்டாம்” (தபரீ: பா:2,பக்:246)

எனவே, சிவிலியன்களையும் சொத்துக்களையும் மனித வாழ்வுக்கு அவசியமான வளங்களையும் அழிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளதுடன் அது பெரும் தவறாகவும் கணிக்கப்படுகிறது.

இஸ்லாத்தில் ஹிப்ளுன் நஃப்ஸ் (உயிர்ப் பாதுகாப்பு), ஹிப்ளுல் மால்(சொத்துப் பாதுகாப்பு), ஹிப்ளுன் நஸ்ல் (பரம்பரை பாதுகாப்பு) போன்ற இலக்குகள் இருப்பதால் இவை ஒன்றும் அதிசயமல்ல.

உலகில் அராஜகம் புரிவோர் யார்? ஆயுத உற்பத்தியாளர்கள் தமது ஆயுதங்களை விற்பதற்காக இனமோதல்களையும் யுத்தங்களையும் தோற்றுவிப்பார்கள். இவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் உருவாக்குகிறார்கள்.

இஸ்லாத்தில் வன்முறை இல்லை

இஸ்லாத்தில் வன்முறைக்கோ தீவிரவாதத்திற்கோ இடம் கிடையாது.

நபி(ஸல்) அவர்கள்

“அளவு மீறிச் செயல்படுவதிலிருந்து (கடும் போக்கை விட்டும்) உங்களை எச்சரிக்கிறேன்” (முஸ்னத் அஹ்மத்:1851)

என்றும்

“எதிலும் தீவிரமாக நடந்துகொள்வோர் அழிந்து விட்டார்கள்” (ஸஹீஹ் முஸ்லிம்: 2670)

என்றும் கூறியிருப்பதிலிருந்து இஸ்லாம் தீவிரவாதத்தை நிராகரிப்பது தெளிவு. முஸ்லிம்களிற் சிலர் அழிவுவேலைகளில் ஈடுபடுவதாயின் அவர்களை முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களாக கருதமுடியாது.

உண்மையான முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைத்தால் அவர்கள் எப்படியிருப்பார்கள் என்று அல்லாஹ் பின்வருமாறு விளக்குகிறான்:-

“அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் அதிகாரத்தைக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஸகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்ய (பிறருக்கு)ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள். மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.” (22:41)

இதுதான் அல்லாஹ்வை பயந்த, மறுமையை விசுவாசித்த, மனித சமுதாயத்தின் மீது உண்மையான பற்றுள்ள ஆட்சியாளர்களுடைய பண்பாகும். அவர்கள் ஆட்சியை கையிலெடுப்பது ஆக்க முயற்சிகளில் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதற்கும் மனித சமுதாயத்திற்கு பங்களிப்பு செய்வதற்கும் மாத்திரமே.

எனவே, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதத்துடன் சம்மந்தப்படுத்துவது எந்தவகைகயிலும் முறையல்ல. நியாயமல்ல.

சுருக்கமாகச் சொன்னால், மனிதன் தனது வாழ்வில் மூன்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகிற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ளான்.மேலும்,மனித வாழ்வில் ஐந்து பிரதான கூறுகள் பேணிப் பாதுக்காப்பட வேண்டும் என்ற நோக்குடன் அதாவது அந்த இலக்குகள் அடையப்பெறப்பட வேண்டும் என்ற நோக்குடன் தான் இஸ்லாமிய ஷரீஆவின் அனைத்து சட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இஸ்லாம் உலகத்திற்கு அருளாகும்.

(இந்த ஆக்கம் 28.12.2023 விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமானது)

– – – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top