Article

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ. எம். எ. அஸீஸ் – பகுதி – II

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ. எம். எ. அஸீஸ் - பகுதி - II

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ. எம். எ. அஸீஸ் – பகுதி – II

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கான, முதல் தொகுதி மாணவர்களைத் தெரிவுசெய்வதற்காக, 16.07.1973 இல் மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் நுழைவுத்தேர்வொன்று மொழி, கணிதம், இஸ்லாம், பொது அறிவு ஆகிய பாடங்களில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதற்குத் தோற்றினர். அதில் சித்திபெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கான நேர்முகப் பரீட்சை, வெள்ளவத்தை நளீம் ஹாஜியாரின் இல்லத்தில் 1973 ஜூலை மாதம் 9, 10, 11,16,17,18 ஆகிய ஆறு நாட்கள் இடம்பெற்றன.

நேர்முகப் பரீட்சையை நடத்தியோரில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், ஜாமிஆவின் முதல் அதிபர் மெளலவி யூ. எம். தாஸீன், அறிஞர் அஸீஸின் ஸாஹிராக் கல்லூரி மாணவன் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, மெளலவி தாஸீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஜாமிஆவைப் பொறுப்பேற்று வக்கீலுல் ஜாமிஆவாகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதிபதி ஏ. எம். அமீன், மசூத் ஆலிம் சாஹிப், இலங்கை முஸ்லிம் மிஷனரி சங்க செயலாளர் அல்ஹாஜ் ஏ. சீ. ஏ. வதூத், மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம், சீனன்கோட்டையைச் சேர்ந்த ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் குறிப்பிட்டு சொல்லக்கூடியோராவர். நளீம் ஹாஜியார் அவர்களும் அங்கு சமூகமளித்திருந்தார். நேர்முகத் தேர்வுக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் அஸீஸ் அவர்களே. நேர்முகப்பரீட்சையின் எல்லா நாட்களும் அஸீஸ் பிரசன்னமாயிருந்தார். அங்கு அவர் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் வினாக்ளைத் தொடுத்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிட்ட அல்லது தொலைத்துவிட்ட ஒரு பொக்கிஷம் ‘அறபுத்தமிழ்’. அறிஞர் அஸீஸ், அறபுத்தமிழைப் பாதுகாப்பதில் அதிக கரிசனை செலுத்தினார். ஒலிக்குறி ஒருமைப்பாடு, அறபுத்தமிழ் அகராதி, அறபுத்தமிழ் இலக்கியக்கோவை என்பன எமது அத்தியாவசியத் தேவை என வலியுறுத்தியவர் அவர். நளீமிய்யா தொடங்கப்பட்ட சில நாட்களின் பின்னர், ஜாமிஆவின் தாபக அதிபரும் ஜாமிஆவில் சேவையாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு அதிபருமான, மெளலவி யூ. எம். தாஸீன் (நத்வி, அல் அஸ்ஹரி) அவர்களுடன் அறிஞர் அஸீஸ் அவர்கள், வகுப்பறைக்கு வந்து ‘அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என்ற அவரின் நூலை, ஜாமிஆவின் முதற் தொகுதி மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஸலாம்கொடுத்துத், தனது கரங்களினால் அன்பளிப்புசெய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜாமிஆ நளீமிய்யாவின் நூலகத்திற்கு அஸீஸ் சிறப்பிடம் அளித்ததாக, அஸீஸ் காலத்து ஸாஹிறாவின் ஆசிரியரும், எழுத்தாளரும், நூலகருமான எஸ்.எம். கமால்தீன் குறிப்பிடுகின்றார். நளீமிய்யா நூலகத்தைத் திட்டமிடும் வாய்ப்பு அஸீஸ் அவர்களினால் கமால்தீனுக்கு வழங்கப்பட்டிருந்தது. எ. எம். எ. அஸீஸ் அவர்கள் தனது மரணத்தின் பின்னர், விலைமதிக்க முடியாத, பெரும்பாலும் அவரது அனைத்து நூல்களையும் ஜாமிஆவுக்கு வழங்கிய வள்ளலாவார். அவரது நூல்கள் ஜாமிஆவுக்கு லொறியில் வந்து சேர்ந்தன. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. நூர் அமீன் அவர்கள் அப்போது ஜாமிஆவின் நூலகராக இருந்தார்.

அறிஞர் அஸீஸ் அவர்கள், ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தனது கட்டுரையில் சொல்வதுபோல, ‘விரிவுரையாளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சேர்த்துக்கொள்ளப்படுவர்’ என ஜாமிஆ பற்றிய அறிமுகக் கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசித்துவந்த எகிப்தியரான அப்துல் கலீல் அயாத் என்பவர் 1975 காலப்பகுதியில் ஜாமிஆவுக்கு வருகைதரு விரிவுரையாளராக சேவையாற்றினார். மேலும் 1977 காலப்பகுதியில் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலிருந்து ஷேய்ஹ் அப்துல் பத்தாஹ், ஷேய்ஹ் இப்ராஹிம் அல் மலீஹ் ஆகிய இரு விரிவுரையாளர்கள் ஜாமிஆவில் கற்பிப்பதற்காக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தினால் வசீகரிக்கப்பட்டவர் அஸீஸ். முஸ்லிம்கள் அந்நாட்டுடன் தொடர்புகொண்டவர்களாக இருக்கவேண்டுமென்பது அவரது அவா. ஜாமிஆ நளீமிய்யாவின் அங்குரார்பணமன்று, இலங்கைக்கான எகிப்து நாட்டுத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்கள் அங்கு சமூகமளித்திருந்தார். அவர் இலங்கையிலிருந்து நாடு திரும்பும்போது, பிரியாவிடை நிகழ்வொன்றும் நளீம் ஹாஜியாரின் தலைமையில் ஜாமிஆவில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய எ. எம். எ. அஸீஸ் அவர்கள், இந்த நிகழ்வு 1901 இல் இலங்கை முஸ்லிம்கள் ஒறாபி பாஷாவுக்கு அளித்த பிரியாவிடையைத் தமக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார். அதில் உரையாற்றிய தூதுவர் அவர்கள், இந்த ஜாமிஆவில் பயின்ற சிறந்த மாணவர்கள் சிலருக்கு, எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தமது மேற்படிப்புக்காக வசதிகள் செய்து கொடுக்கப்படுமெனக் குறிப்பிட்டார்.

1978 இல் நளீமியாவின் முதல் தொகுதி மாணவர்களான ஜே.எம். உவைஸ் (கொழும்பு), ஏ.எம். அபுவர்தீன் (மாத்தளை), வை. அபுல்பஷர் (புத்தளம்) எம்.ஐ.எம். நியாஸ் (பொல்கஹவெல) ஆகியோருடன் ஜாமிஆவின் உப அதிபர் மெளலவி ஏ.எம்.சீ.எம்.புஹாரி (மன்பஈ), விரிவுரையாளர் எஸ்.எல்.எம். ஹசன் ஆகியோரும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு, வக்ப் அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று சென்றனர். ஜாமிஆவே அவர்களை அங்கு அனுப்பிவைத்தது. அபுல்பஷர், எம். ஐ. அப்துர் றஹீம் (மூதூர்) ஆகியோர் ஜாமிஆவின் கற்கையைப் பூர்த்திசெய்து பட்டத்தையும் பெற்றனர். அஸ்ஹர் சென்றோர் கலைமானிப் பட்டத்தைப் பெற்றனர். அபுவர்தீன், கலாநிதிப் பட்டம்பெற்ற நளீமிய்யாவின் முதலாவது மாணவராவார்.

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடியும் வழிகாட்டியும் அறிஞர் எ. எம். எ. அஸீஸ் அவர்களே. ஜாமிஆவில் அறிஞர் அஸீஸை சந்தித்த மாணவர்கள், முதல் தொகுதி மாணவர்கள் மட்டுமே. ஏனெனில் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களில், 24 நவம்பர் 1973 இல், நளீமிய்யாவைத் தரிசிக்க ஆவலாக இருந்த நிலையில் அன்னார் இறையடிசேர்ந்தார்கள்.

ஜாமிஆ மாணவர்கள் மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் சமசந்தர்ப்பத்தில் பெறவேண்டும். அரசாங்க அதிபர்கள் போன்ற உயர் பதவிகளை வகித்து, பள்ளிவாசல்களில் கொத்பாப் பேருரைகளையும் நிகழ்த்தவேண்டும் போன்ற சிந்தனைகளை ஜாமிஆவில் விதைத்தவர்கள் அறிஞர் அஸீஸ் அவர்களும் அதிபர் தாஸீன் அவர்களுமாவர். இச்சிந்தனைகளால் உருப்பெற்ற செயல், இன்று வளர்ச்சியடைந்து வியாபித்துள்ளது. ஜாமிஆவின் இரண்டாம் தொகுதி மாணவர்களில் ஒருவரான கனேவல்பொலயை சேர்ந்த ஹபீப் முஹம்மத், இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, மூதூர் உதவி அரச அதிபராக சேவையாற்றியபோது, அதிகாலை சுபஹ் தொழுகையை நடத்துவதற்கு, பள்ளிவாசலுக்கு நடந்துவரும்போது சுடப்பட்டார். சமூகத்துக்காகத் தனது உயிரை தியாகம்செய்த நளீமியை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

பாகிஸ்தான் நாட்டின் சட்டம், நீதித் துறைகளுக்கான அமைச்சரும் அந்நாட்டு அரசியலப்பை வரைந்தவர்களுள் ஒருவரும் சட்டமாஅதிபரும் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தூதுவராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான ஏ.கே. புரோஹி அவர்கள் எ. எம். எ. அஸீஸின் மறைவின்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “முஸ்லிம்களின் அறிவுத்துறையில், வளர்ச்சிக்காகவும் அவர்தம் சமூக வாழ்வு வளம்பெறவும் அஸீஸ் அளித்த புத்தூக்கம் அளப்பரியதாயுள்ளது. உண்மையில் அஸீஸ் போன்றோர் மரணிப்பதில்லை. மக்களின் உள்ளங்களிலே ஒளியேற்றி வைப்பதற்காக ஓயாது உழைப்பவர்கள், மக்களுக்காகப் பணிபுரிவதாகப் பாசங்கு செய்பவர்களைப்போலன்றி, அதி உன்னத வாழ்வுநிலையை எய்துகிறார்கள்”.

ஏ.கே. புரோஹி அவர்கள், 07.01.1976 அன்று ஜாமிஆவுக்கு சமூகமளித்து, நிருவாகத் தொகுதிக் கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார். அவ்வமயம் ஆற்றிய உரையின்போது கூறிய கதை இது. “ஒரு மாணவன் ஓர் ஆசிரியரிடம் கற்றான். அவரே அம்மாணவனின் முதல் ஆசிரியருமாவார். கற்றல் நடவடிக்கைகளின் இறுதிநாளன்று அவ்வாசிரியர், ஒரு காகிதத்தில் ‘ஒன்று’ என்ற இலக்கமிட்டு அதனை அவனுக்கு வழங்கினார். அம்மாணவன் இரண்டாவது ஆசிரியரிடம் பயின்று முடிந்தபோது இரண்டாவது ஆசிரியர் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தைப் போட்டு அக்காகிதத்தை அவனிடம் கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது கற்பித்தலின் இறுதியில் ஒவ்வொரு பூச்சியம் போட்டனர். பெறுமதி அதிகரித்துச் சென்றது. ஒரு நாள் அம்மாணவன் தனது முதலாவது ஆசிரியரை சந்தித்தபோது, தொகை அதிகரித்திருப்பதை பெருமையோடு கூறினான். அவர் அந்த காகிதத்தைப் பெற்று, தான் முதலாவதாக எழுதிய ஒன்று என்ற இலக்கத்தை அழித்துவிட்டு அம்மாணவனிடம் அக்காகிதத்தை மீளக்கையளித்தார்”.
ஜாமிஆ நளீமிய்யா மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஓர் ஆளுமை எ. எம். எ. அஸீஸ்.

-இஸட். ஏ. ஸன்ஹிர்-

உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top