Muslim History

இவ்வருட ரமழான் அதிகம் அருள் நிறைந்தது …

ramadan
இவ்வருட ரமழான் அதிகம் அருள் நிறைந்தது ...

முன்னர் நாம் அடைந்த ரமழான் மாதங்களை விட இவ்வருட ரமழான் அதிகம் அருள் நிறைந்ததாகும். அசாதாரண சூழ்நிலையிலும் ரமழானை கடைப்பிடிக்க நாம் நாட்டம் கொள்கின்றோம். எனவே அருள் நிறைந்த மாதத்தை அரவணைப்பதில் எவரும் பின்நின்றுவிடாதீர்கள். அல்லாஹ் போதுமானவன்.

வழமைபோன்று மாதங்களில் சிறந்த மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். ஆனால் இவ்வருட ரமழான் முன்னைய ரமழான் மாதங்களைப்போல் மஸ்ஜித்துக்கு சென்று வர முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

முன்னரை விட அதிக வணக்க வழிபாடுகளில், திக்ர் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு கிடைத்ததை இட்டு மகிழுங்கள்.

 

“அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க்
கொடுக்க) விரும்பவில்லை.” (பகரா 185.)

“நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.” 94:06

போன்ற வசனங்களை நினைவில் கொண்டு எம்மை நாம் தேற்றிக்கொள்வோம். அல்லாஹ் எல்லாவற்றையும் இலேசாக்கிடப் போதுமானவன்.

இவ்வருட ரமழான்… அல்லாஹ்வின் பூரண அருளைப் பெறுவதில் இருந்து எம்மை எதுவும் தடுத்து விடக்கூடாது. சொல்லப்போனால் கடந்த ரமழான் மாதங்களை விட இவ்வருட ரமழான் எனும் அருள் பொக்கிசத்தை பூரணமாக அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

வீட்டோடு இருந்து ரமழானைக் கழிப்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தபோதிலும்,  இந்த வருட ரமழானை நாம் இன்னும் சிறந்ததாக மாற்றலாம்.

எதிர்மறை எண்ணங்களை வெல்லுங்கள் !

எதிர்மறை மனநிலையில் இருந்து விடுபடுவது முதற் படியாகும்.

நாம் அனைவரும் ஆசையுடன் ஆவலாக வரவேற்கின்ற மாதமல்லவா இது…

அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் மாதம் அல்லவா இது…

அல்குர்ஆன் இறங்கிய மாதமல்லவா இது…

நம் மனதிலும் உள்ளத்திலும் சிறப்பு அந்தஸ்த்தைக் கொண்ட மாதமல்லவா இது…

ரமழானின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதன் நற்பண்புகள் மற்றும் ஆன்மீக நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

இலக்குகளை உருவாக்குவோம்.

இம் மாதத்திற்கான இலக்குகளை முதலில் உருவாக்குவோம்.

ஏனெனில் முன் எப்போதையும் விட வேலைப்பளுக்கள் அற்று முழு நேரமும் வீட்டில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • முன்னரை விட அதிகம் அல்குர்ஆனை ஓதலாம் என்பதில் மகிழ்வடையுங்கள். அவ்வாறே அல்குர்ஆனை ஓதுங்கள்.
  • முன்னரை விட அதிக வணக்க வழிபாடுகளில், திக்ர் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு கிடைத்ததை இட்டு மகிழுங்கள்.

‘பெருமானார் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஏனைய மாதங்களைவிட அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.’

  • குடுபத்தவர்களுடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடக் கிடைத்தமைக்காக சந்தோசமடையுங்கள்.

குடும்பமும் நீங்களும்

ரமழானில் சமயலறையில் எப்போதாவது உதவியிருக்கின்றீர்களா ? பெண்கள் சமையலறையில் சமைப்பதிலும் சுத்தம் செய்வதிலும் பல மணிநேரம் செலவழிக்கின்றார்கள். சமயலறையில் பெண்களின் அர்ப்பணிப்பை உணர இக்காலத்தை சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு திக்ர்களை சொல்லிக் கொடுங்கள். குடும்பத்தவர்களுக்கு இமாம் ஜமாஅத்தாக தொழுகை நடாத்துங்கள். தராவீஹ் தொழுகையையும் நடாத்திப் பாருங்கள். ஆன்மீக சுவையை உணர இதைவிட வேறு சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப் போகின்றது.

பெற்றோருடன் நேரத்தை செலவிடுங்கள், அவர்கள் உங்களுக்கு செய்தவற்றையெல்லாம் நினைத்துப்பாருங்கள். அவர்களின் அருகில் இருந்து பணிவிடை செய்யுங்கள்.

அவதானத்திற்கு

எமது அண்டை அயலவர்கள் பற்றி அதிகம் சிரத்தை எடுக்கக் கூடிய நேரமிது.

உங்கள் வீட்டு அடுப்பு எரிவது போன்று அவர்களது வீட்டு அடுப்பு எரிவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரமழான் மாதத்தில் ஏழைகளின் பசியை உணராவிட்டால் வேறு எப்போது உணரப்போகின்றோம் என்பதையும், இந்த அசாதாரண சூழலையும் நினைவில் வையுங்கள்.

எல்லாவற்றையும் விட நாளை மறுமையில் எம்மை கேள்விக்குட்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top