Muslim History

மூதூரில் நிர்மானிக்கப்பட்ட முதலாவது பள்ளி வாயல்

பள்ளி
மூதூரில் நிர்மானிக்கப்பட்ட முதலாவது பள்ளி வாயல்

மூதூர் பகுதியில் அமையப் பெற்ற முதலாவது பள்ளி வாயலாக மூதூர் “பெரிய பள்ளி” எனும் பெயரில் அழைக்கப்படுகின்ற பள்ளிவாயல் கருதப்படுகிறது.

இது மூதூர் நொக்ஸ் வீதி மற்றும் அரபிக் கல்லூரி வீதி என்பவற்றுக்கு இரு புற ஒருங்கிணைப்பில் அமைந்து காணப்படுகிறது.

இப்பள்ளி வாயலானது ஆரம்ப கால முஸ்லிம்களது குடியேற்றங்கள் மற்றும் அரேபிய வணிகர்களில் இலங்கைக்கான வர்த்தக வருகையோடு அதன் கட்டுமானங்களும் ஆரம்பமாகியதாக வரலாறுகள் மூலம் அறியக் கிடைக்கிறது.

ஆரம்ப காலங்களில் அரேபிய வணிகர்கள் , தென் இந்திய வணிகர்கள் போன்றவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை நாட்டையும் தளமாகக் கொண்டு ஈடுபட்டதோடு இந்திய காயல் பட்டினத்தவர்களது பலமிக்கதொரு தொடர்பாடலானது இன்று வரை மூதூர் பகுதி மக்களிடம் தொடர்வதால் தொண்மை மிக்க சான்றுகளை தெளிவுபடுத்திக்காட்டுவதாக அமைகிறது.

இதற்கு சிறந்த ஆதாரமாக பள்ளி புனரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட பலகையில் அமையப்பெற்ற “பலகை வெட்டு” பிரதானமானதாக நோக்கப்படுகிறது. அப்பலகையானது அரபுத் தமிழ் மற்றும் விவிளியன் தமிழ் மொழிகளிலாலான எழுத்துக்களை மையப்படுத்தியதாக எழுதப்பட்டிருப்பது சான்றாகமைகிறது. அப் பலகையானது முன்னொரு கால பள்ளி புனர் நிர்மாணம் தொடர்பான சில குறிப்புக்களை அடையாளப் படுத்துகிறது.

அத்தோடு பள்ளிவாயலின் ஸ்தாபகம் தொடர்பாக தகுந்த வரலாற்றுச் சான்றுகள் அறியப்படா விட்டாலும் அங்கு பெயர் குறிப்பிடப்படாத ஒரு கபுருஸ்தானம்(அடக்கஸ்தளம்) இருந்துள்ளது. அக்கால மக்கள் அதனை அவ்ளியா (இறை நேசர்) என்றடிப்படையில் காணிக்கை நிறைவேற்றுவது போன்ற சடங்குகளை செய்து வந்துள்ளனர். இதனால் அப்பள்ளி வாயலின் ஸ்தாபகராக அங்கு அடக்கம் செய்யப்பட்டவரே அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்.அக்கபுறு பிற்பட்ட கால பள்ளி விஸ்தீரனத்தின் போது அகற்றப்பட்டது.

1660 ஆம் ஆண்டு கொட்டியாபுரப் பகுதிக்கு வருகை தந்த ஐரோப்பியரான ரொபட் நொக்ஸ் (1641-1720) என்பவரின் வரலாற்றுக் குறிப்பேட்டில் உள்ள வாசகங்களும் இப்பள்ளி அமைவு பற்றிய வரலாற்றோடு ஒப்பிட வேண்டியுள்ளது. அதாவது அவர் குறிப்பேடு “நாங்கள் கொட்டியாபுரம் (மூதூர்) வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டோம். அங்கு வெள்ளைப் பருத்தித் துணி தொங்கவிடப்பட்டிருந்தது.வீட்டில் சுமார் 20 நாட்கள் வரை தங்கவைக்கப்பட்டிருந்தோம் நல்ல உபசரிப்புகளோடு அவ்வீட்டார்கள் எம்மோடு நடந்து கொண்டனர்”

இவ்வாசகங்கள் குறித்து நிற்பது நொக்ஸ் என்பவர் தஞ்சம் பெற்றிருந்த வீடானது முஸ்லிம்களது வீடு என்பது தெளிவாவதோடு அப்பகுதிகளும் முஸ்லிம்களுக்கு சொந்தமான பகுதியாக இருந்திருப்பது நிரூபனமாகிறது. அத்தோடு மூதூர் பெரிய பள்ளிவாயலானது முஸ்லிம் குடியேற்றங்களோடு அமைக்கப்பட்டு இயங்கியிருப்பதும் தெளிவாகிறது.

இப்பள்ளி வாயலானது “மரைக்காயர்” என்றழைக்கப்பட்ட தலைமை வகிக்கும் அதிகாரிகள் மூலமாகவும் பரிபாலனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது குறிப்புகள் தொடர்பாக ஒரு நூற்றாண்டு தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களது பெயர் விபரமும் அறியப்பட்டுள்ளது.

  • ஹஸன் அலி முஹம்மது அசனார் லெப்பை மரைக்காயர்
  • கஜ்ஜு முஹம்மது மரைக்காயர்
  • முத்தலிப் பாவா மரைக்காயர்
  • வாப்பு மரைக்காயர்
  • மம்மல மரைக்காயர்
  • கியாத்து மாமிசா மரைக்காயர்
  • செய்யது காசீம் மரைக்காயர்
  • அப்துல் காதர் மரைக்காயர்

மூதூர் பெரிய பள்ளி வாயல் மாத்திரமே ஆரம்ப காலங்களில் இயங்கி வந்த தாய்ப்பள்ளியாகக் கணிக்கப்படுவதோடு அன்றாடம் இடம்பெருகின்ற வணக்க வழிபாடுகள் திருமண வைபவங்கள் மற்றும் மௌலீது கந்தூரி போன்றவைகளும் அதிலேயே இடம்பெற்றிருந்தது. முத்தலிப் பாவா மரைக்காயர் என்பவரது காலத்திலேயே அரபு மொழியிலான திருக்குர்ஆன் ஓதிக்காண்பிக்கப்பட்டிருந்தது. அப்போது இந்திய நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட “லெப்பைமார்கள்”(அல்குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்) மூலமாக இது இடம்பெற்றதோடு தற்போதுள்ள அல்குர்ஆன் மத்ரசாவும் பரிணாம வளர்ச்சியில் தோற்றம் கண்டது. அப்பள்ளியில் ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் பள்ளி இமாம்களாக கடமையாற்றியவர்களாக பின்வருவோரை அடையாளப்படுத்த முடியும்.

  • அப்துர் ரஹ்மான் ஆலிம்
  • ஹாமிது ஆலிம்
  • தாஹீர் ஆலிம்
  • எம்.ஏ.அப்துல் குத்தூஸ் ஆலிம்
  • ஜெய்னுதீன் ஆலிம்
  • என்.எம்.அன்வர்தீன் மௌலவி
  • எஸ்.எம்.ஸாலிஹ் ஆலிம்
  • எச்.எஸ்.ஆஸிம் மௌலவி என்பவர்கள் ஆவர்.

காலவோட்டத்தில் சனத்தொகை அடர்த்தி குடிப் பரம்பல் ஆகியவைகளினால் பல வேறு புதிய பள்ளிகள் நிர்மாணிக்க வேண்டிய தேவையேற்பட்டு 1932 ஆம் ஆண்டு மூதூர் அக்கரைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையால் அக்கரைச்சேனை பெரிய பள்ளியும் ஆனைச்சேனை , பெரிய பாலம் எனுமிடத்திலும் பள்ளிவாயல்கள் அமைக்கப்பட்டு அன்றாட தொழுகைகளும் ஏனைய வணக்க வழிபாடுகளும் இடம்பெற்றன.தற்போது மூதூர் பகுதியில் மாத்திரம் சுமார் 20 ஜும்ஆ பள்ளிகளோடு மொத்தமாக 45 பள்ளிகள் அமையப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:-
M.M.MANASEER (NATHWI

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top