Article

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் – பகுதி – I

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் - பகுதி - I

பகுதி – I

இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் 04.10.1911 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அன்னாரின் தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் காதி நீதிபதியுமாவர். தாயார் சுல்தான் முஹிதீன் நாச்சியா. யாழ் வைதீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், என்பனவற்றில் பயின்ற எ.எம்.எ அஸீஸ், லத்தீன் மொழியைக் கற்றதுடன் தமிழ், ஆங்கிலம் என்பனவற்றில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

கொழும்பு ஸாஹிறாவின் அதிபராக (1948 – 1961) இருந்த அஸீஸ் அவர்கள், செனற் சபை உறுப்பினராகவும் (1952) பொதுச் சேவை ஆணையாளராகவும் (1963) சேவையாற்றியுள்ளார். 19.05.1945 இல் அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியத்தைத் (The Ceylon Muslim Scholarship Fund) தாபித்த அவர், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் (Y.M.M.A) தந்தையுமாவார்.

அரச சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நூலான இலங்கையில் இஸ்லாம், மிஸ்ரின் வசியம், தமிழ் யாத்திரை, கிழக்காபிரிக்கக் காட்சிகள், ஆபிரிக்க அனுபவங்கள், அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் உட்படப் பல நூல்களின் ஆசிரியரான அஸீஸ், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். யாழ் பல்கலைக்கழகம் அன்னாருக்கு 1980 இல் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.

இஸ்லாமியப் புரட்சிகர சிந்தனையாளர்களால் பெரிதும் கவரப்பட்ட அஸீஸ், மேலைத்தேய நாடுகளுடனும் தொடர்புகளைக்கொண்டிருந்தார். கீழைத்தேயத் தத்துவங்கள், மரபுகள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு ஆராயும் சந்தர்ப்பத்தை அது அவருக்கு வழங்கியது. உலமாப் பெருமக்களுக்கும் மேற்கத்தேய கல்விமுறையில் பயின்றோருக்கும் இடையில் நிலவிய இடைவெளியைக் குறைப்பதற்கும் பழைமை, புதுமை என்பனவற்றை இணைப்பதற்கும் தாம் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என அறிஞர் அஸீஸ் விரும்பினார்.

ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் அதன் ஆரம்பகால செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு செய்தவர்களுள் பிரதானமானவர் எ.எம்.எ. அஸீஸ். 1941 இல் ‘முஸ்லிம் மித்திரனில்’ அவர் எழுதிய, ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற கட்டுரை 1963 இல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்பெற்றது. ‘ இலங்கையில் ஒறாபிபாஷா’, ஜாமிஉல் அஸ்ஹர்’ ‘எமக்கொரு ஜாமியாஹ்’ ஆகிய கட்டுரைகள் அவரது நூலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. உலகின் முதன்மையான பல்கலைக்கழகம் என்று பெயர்பெற்றது எகிப்திய அல் அஸ்ஹர் ஆகும்.

அக்கட்டுரையில், ஒரு ‘ஜாமிஆ’ எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி அவர் விளக்குகிறார். நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடியவர்களை உருவாக்கும் ஒரு கலாநிலையம் அமைக்கப்படல் வேண்டும். மொழி, கணிதம், விஞ்ஞானம் உள்ளடங்கிய பாடங்களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் இக்கலாநிலையத்தில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியும் போதிக்கப்படல் வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதியுடையோராயிருப்பதுடன் அவர்களில் சிலர் வெளிநாட்டவராகவும் இருக்க வேண்டும்.
இத்தகைய ஒரு கலாசாலை தொடங்கப்படும்வரை விருப்பமுள்ள மாணவர்கள், இவ்வாறான கல்வியைப் போதிக்கும் மிஸ்று (எகிப்து) போன்ற இடங்களுக்குச் சென்று கற்பதற்கான பண உதவிகளையாவது நாம் செய்யவேண்டும் என்ற கருத்துக்களைத் தனது கட்டுரையில் தெரிவிக்கும் அவர், “மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை, ஒரு யோசனையாக மாத்திரம் முடிந்துவிடாமல் ஒரு நல்ல காலம் அதை எதிர்பார்த்து நிற்கின்றது என நாம் நம்பிப் பிரார்த்திப்போமாக!” என அக் கட்டுரையை நிறைவுசெய்கின்றார்.

இலங்கையில், செல்வந்தராக மட்டுமன்றி கொடைவள்ளலாகவும் அன்று அனைவராலும் அறியப்பெற்றிருந்தவர் பேருவளை, சீனன்கோட்டையைச் சேர்ந்த நளீம் ஹாஜியாராவார். மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியையும் போதிக்கும் கலாநிலையம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மனதிலும் உதித்தது. தனது சொத்து, செல்வம் முழுவதனையும் அதற்காக அர்ப்பணிக்க ஹாஜியார் தயாராக இருந்தார். படித்த, பட்டம் பெற்ற அறிஞர்களினதும் சிந்தனையாளர்களினதும் தொடர்பும் நளீம் ஹாஜியாருக்குக்கிடைத்தது. எ.எம்.எ. அஸீஸ் மருதானை ஸாஹிறாவின் அதிபராக இருந்து, வெளியாகிய பின்னர் நளீம் ஹாஜியாருடனான தொடர்பு வலுப்பெற்றது. இப்பின்னணியே ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் வள்ளல் நளீம் ஹாஜியாராவார்.

ஜாமிஆ நளீமிய்யா 19.08.1973 இல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜாமிஆ பற்றி அறிமுகம் செய்வதற்காக வெளியிடப்பட்ட கையேட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “…………….. இஸ்லாத்தையும் அதன் தத்துவம், கோட்பாடு, கொள்கைகளையும் ஆழ்ந்து கற்று, அதே நேரத்தில் நல்ல சிந்தனைகள், தத்துவங்கள் என்பனவற்றிலும் சிறந்த அறிவு படைத்த உலமாக்களை உருவாக்க வேண்டிய ஓர் அவசரத் தேவை இன்று தோன்றியுள்ளது. இத்தகைய உலமாப் பெருமக்களின் வழிகாட்டுதலும் தலைமையுமே மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன………… இத்தகைய உலமாக்களை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தின் இன்றைய ஒரு முக்கிய தேவையைப் பூர்த்திசெய்யும் அடிப்படை நோக்கத்துடனேயே ஜாமிஆ நளீமிய்யா (நளீமிய்யா இஸ்லாமிய கலாநிலையம்) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யாவின் பாடத்திட்டம் பற்றியும் அக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கல்வியோடு பொதுக் கல்வியையும் பயிலக்கூடிய விதத்தில் பாடத்திட்டம் அமையுமென்றும் குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டக்கலை, இஸ்லாமியப் பண்பாடு, தத்துவஞானம், நாகரீகம், மதங்கள், நவீன சிந்தனைகள் தத்துவங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு என்பன பாடத்திட்டத்தில் இடம்பெறுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடத்திட்டத்தை அமைப்பதிலும் காலத்துக்குக் காலம் அதனைப் புதுப்பிப்பதிலும் இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஜாமிஆக்களின் படிப்பினைகளும் அனுபவங்களும் கருத்திற்கொள்ளப்படுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எ.எம்.எ. அஸீஸ் மஸ்ஜிதுகளால் கவரப்பட்டிருந்தார். பள்ளிவாசல்களின் கட்டிடக் கலையம்சங்கள் மட்டுமல்லாது, அதன் சமூகப் பங்களிப்புக்கள் பற்றியும் உலக நாடுகளில் தாம் சென்ற இடங்களிலெல்லாம் அவர் ஆய்ந்து அறிந்தார். ‘மிஸ்றின் வசியம்’ என்ற நூலில் ‘மிஸ்றின் மசூதிகள்’ என்ற ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யாவின் கையேடு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “வளாகத்தின் மத்தியில் கண்ணைக் கவரும் வகையில், இஸ்லாமியக் கட்டிடக் கலைச் சிறப்பை உணரத்தக்க கூடிய வகையில் ஒரு மஸ்ஜித் கட்டப்படுகின்றது. அமைப்பிலும் வனப்பிலும் ஜாமிஆவின் சிறப்பம்சமாக இப்பள்ளிவாசல் அமையும். இந்த ஜாமிஆவில் பயிலும் மாணவர்களுக்குப் பரந்த இஸ்லாமிய அறிவைப் புகட்டுவதோடு இஸ்லாமிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் என்பனவற்றில் பயிற்சியளிக்கும் நோக்கத்துடனேயே இம்மஸ்ஜித் எழுப்பப்படுகின்றது. ………….. இஸ்லாமிய அறிவின் சின்னமாக ஜாமிஆவும் இஸ்லாமிய வாழ்க்கை முறைப் பயிற்சியின் சின்னமாக மஸ்ஜிதும் அமையும்”.

பகுதி – II (Click)

-இஸட். ஏ. ஸன்ஹிர்-

உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top